கர்நாடகத்தில் தொடர் கனமழை: 6 மாவட்டங்களில் 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை
கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 6 மாவட்டங்களில் நேற்றும் 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 6 மாவட்டங்களில் நேற்றும் 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் குளிர்
கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் கோடை மழை கொட்டி வருகிறது. பருவமழை காலத்தை போல கோடை காலத்திலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த தொடர் கனமழை காரணமாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தலைநகர் பெங்களூருவில் கடந்த 17-ந்தேதி இரவு கொட்டி தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இதனால் நீண்ட போராட்டத்துக்கு பிறகு தேங்கிய நீரை மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினர். அதன்பிறகு பெங்களூருவில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. அவ்வப்போது கனமழையும், லேசான தூரலும் இருந்து வருகிறது.
4 மாத குழந்தை மீட்பு
தலைநகர் பெங்களூருவில் மழை குறைந்தாலும் வெளிமாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. சிவமொக்கா டவுனில் பெய்த கனமழையால் வித்யாநகர் 13-வது கிராசில் உள்ள ஒரு வீடு தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த வீட்டில் இருந்த 4 மாத குழந்தை உள்பட குடும்ப உறுப்பினர்கள் தண்ணீரில் தத்தளித்தனர். இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் ரப்பர் படகு மூலம் 4 மாத குழந்தை உள்பட தண்ணீரில் தத்தளித்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
தொடர் கனமழையால் சிவமொக்கா தாலுகா முத்தினகொப்பா கிராமத்தில் உள்ள சிக்கேரி ஏரி உடைந்து தண்ணீர் விளைநிலங்களில் புகுந்தது. மேலும் அந்தப்பகுதியில் உள்ள தரைமட்ட பாலத்தை தாண்டி தண்ணீர் செல்கிறது. அப்போது பாலத்தை கடக்க முயன்ற கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
15 ஆடுகள் செத்தன
தாவணகெரேயில் தொடர் கனமழையால் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. தாவணகெரே டவுன் ஆசாத் நகர் அருகே ஹரப்பனஹள்ளி-தாவணகெரேவை இணைக்கும் ஆற்றுப்பாலம் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இந்த பாலத்துக்கு மேலே 4 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது. சங்கிலிபுரா-குடஹள்ளி, ஹரப்பனஹள்ளி-உப்பங்குதுர்கா பகுதிகளில் பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மலைநாடு மாவட்டமான சிக்கமகளூருவில் 2 நாட்களாக கனமழை கொட்டுகிறது. இதனால் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூடிகெரே அருகே ராட்சத மரம் ஒன்று சாய்ந்து விழுந்து பசுமாடு ஒன்று பரிதாபமாக செத்தது. மேலும் அஜ்ஜாம்புரா பகுதியில் மின்னல் தாக்கி 15 ஆடுகள் செத்தன. இதைத்தவிர மாவட்டத்தில் பல இடங்களில் பெரிய, பெரிய மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. மாவட்டத்தில் கனமழைக்கு 10 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
ஆறுகளில் வெள்ளம்
இதேபோல், ஹாசன், ராய்ச்சூர், தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டி வருகிறது.ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி பகுதியில் உள்ள அணையும் நிரம்பி உள்ளது. இதனால் அந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதன்காரணமாக தாழ்வான பகுதியில் உள்ள மக்களும், அணையையொட்டி வசிக்கும் மக்களும் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மைசூருவில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றிலும், வடகர்நாடகத்தில் பெய்யும் மழையால் கிருஷ்ணா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தவிர மேலும் சில ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளின் குறுக்கே உள்ள பாலங்களை மூழ்கடித்தப்படி தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
2-வது நாளாக விடுமுறை
தொடர் கனமழை காரணமாக ஹாவேரி, தார்வார், சிவமொக்கா, தாவணகெரே, தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களிலும் 2-வது நாளாக நேற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இன்றும் அங்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சிவமொக்கா, உடுப்பி, தாவணகெேர, உத்தரகன்னடா, பல்லாரி, பெலகாவி, தார்வார், கதக், தட்சிண கன்னடா, சிக்கமகளூரு, குடகு, ஹாவேரி ஆகிய 12 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் பெங்களூருவில் மேகமூட்டமாக காணப்படும் என்றும், மற்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக 12 மாவட்டங்களில் அதிகளவு மழை பதிவாகி உள்ளது. கர்நாடகத்தில் நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) பின்வருமாறு:-
சிவமொக்கா 214, உடுப்பி 210, பல்லாரி 200, தாவணகெரே 195, உத்தரகன்னடா 187, தட்சிண கன்னடா, கதக் தலா 178, தார்வார் 169, பெலகாவி 168, குடகு 160, ஹாவேரி 145, சிக்கமகளூரு 96.