குடகில் மீண்டும் வேகமெடுக்கும் கனமழை; பாகமண்டலா-கரிகே சாலையில் நிலச்சரிவு


குடகில் மீண்டும் வேகமெடுக்கும் கனமழை; பாகமண்டலா-கரிகே சாலையில் நிலச்சரிவு
x

குடகில் கனமழை மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இந்த கனமழையால் பாகமண்டலா-கரிகே சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

குடகு;

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஜூலை) தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. 2 வாரங்களுக்கு மேல் கொட்டிய கனமழையால் மாநிலத்தில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. அதன்பிறகு கனமழை ஓய்ந்திருந்தது. இதனால் வெள்ளம் வடிந்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது.

இந்த நிலையில் மாநிலத்தில் பெங்களூரு, குடகு, துமகூரு, தட்சிண கன்னடா உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது.

நிலச்சரிவு

குறிப்பாக குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை இடைவிடாது கொட்டி வருகிறது. சிறிது நாட்கள் ஓய்வெடுத்திருந்த கனமழை தற்போது வேகமெடுத்து பெய்து வருவதால் அந்தப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். பாகமண்டலா பகுதியில் கொட்டும் கனமழையால் அங்கு பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பாகமண்டலா-கரிகே சாலையில் பாச்சிமலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து வந்து பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் நிலச்சரிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

காவிரியில்...

ஏராளமான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் தலைக்காவிரியில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவு செல்கிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மீண்டும் கனமழை கொட்டி வருவதால், சேதங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.


Next Story