உங்கள் குடும்பத்தின் ஒருவராக வந்திருக்கிறேன் - மும்பை முஸ்லீம் கல்வி நிறுவனத்தில் பிரதமர் மோடி பேச்சு
“நான், உங்கள் குடும்ப உறுப்பினர்” என்று போரா முஸ்லீம்களின் தலைமைக் கல்வி நிறுவன தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
மும்பை,
போரா முஸ்லீம்களின் தலைமைக் கல்வி நிறுவன தொடக்க விழா மும்பையில் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைவரையும் போரா முஸ்லீம் சமுதாய தலைவர்கள் வரவேற்றனர்.
கல்வி நிறுவனத்தை தொடக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
"உங்களிடம் வரும்போது குடும்பத்திற்கு வருவது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது. இன்று சில வீடியோக்களைப் பார்த்தேன். அதைப் பார்த்த பிறகு எனக்கு ஒரு புகார் கூற தோன்றுகிறது. அந்த வீடியோவில் என்னை குஜராத் முதல்-மந்திரி என்றும், பிரதமர் என்றும் பலமுறை குறிப்பிட்டார்கள். நான், உங்கள் குடும்ப உறுப்பினர்.
நான் முதல்வராகவோ, பிரதமராகவோ இங்கு வரவில்லை. இந்தக் குடும்பத்தோடு எனக்கு 4 தலைமுறை தொடர்பு இருக்கிறது. 4 தலைமுறைகளைச் சேர்ந்தவர்களும் எனது வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.
இன்று தொடங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனம் வளர்ச்சிக்கான, மாற்றத்திற்கான அடையாளம். காலத்திற்கு ஏற்ப தாவூதி போரா சமூகம் முன்னேற்றமடைந்து வருகிறது. வெளிநாடுகளுக்குச் செல்லும்போது போரா இன மக்கள் எவ்வளவு நேரமானாலும் இருந்து என்னை பார்த்துவிட்டு செல்வார்கள்" என்று தெரிவித்தார்.