சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தங்கியிருப்பது குறித்து அசாம் முதல்-மந்திரி சலசலப்பு கருத்து


சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தங்கியிருப்பது குறித்து அசாம் முதல்-மந்திரி சலசலப்பு கருத்து
x

சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தற்போது அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் உள்ள ஓட்டலில் முகாமிட்டு உள்ளனர்.

மும்பை,

சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தற்போது அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் உள்ள ஓட்டலில் முகாமிட்டு உள்ளனர். இது பா.ஜனதா ஆளும் மாநிலமாகும்.

இந்தநிலையில் மராட்டிய எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் முகாமிட்டு இருப்பது குறித்து அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வ சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் வேறுவிதமாக பதிலளித்து நிருபர்களை திசை திருப்பினார். அவர் கூறியதாவது:-

எங்களது மாநில வெள்ள பாதிப்பை சமாளிக்க எங்கள் மாநிலத்திற்கு நிதி தேவைப்படுவதால் அனைத்து சுற்றுலா பயணிகளையும் தற்போது மாநிலத்துக்கு வருமாறு வரவற்கிறோம். மழை வெள்ளத்தால் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ள இந்த கடினமான காலகட்டத்தில் நமது பெரும்பாலான ஓட்டல்கள் காலியாக இருக்கும்போது அல்லது குறைந்த எண்ணிக்கையில் மக்கள் தங்கி இருக்கும்போது நாம் ஏன் நம்மை தேடி வரும் லட்சுமி தேவியை திருப்பி அனுப்ப வேண்டும்?

ஆசாம் மாநிலம் ஒரு சர்வதேச அரசியல் மையமான மாறினால் நான் மகிழ்ச்சி அடைவேன். தற்போதைய நெருக்கடி சூழ்நிலையை சமாளிக்க வருவாய் ஈட்டுவதற்கு அனைவரையும் இந்த மாநிலத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அசாமில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக 32 மாவட்டங்களில் உள்ள 55 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை தொடர்மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 89 பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story