இரும்பு கம்பியால் தாக்கி மனைவி அடித்து கொலை
கவுரிபிதனூர் அருகே குடும்ப தகராறில் இரும்பு கம்பியால் மனைவியை அடித்து கொலை செய்த ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோலார் தங்கவயல்:-
குடும்ப தகராறு
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூரை அடுத்த கங்காநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மனைவி லட்சுமி தேவியம்மா (வயது 42). இவர்கள் 2 பேரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. மற்றொரு மகள் பெங்களூருவில் வசித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அக்கம் பக்கத்தினர் தலையிட்டு 2 பேரையும் சமாதானம் செய்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணப்பா வேலை விஷயமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். நேற்று மகளிர் சுய உதவி குழுவினர், பணம் வசூல் செய்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது வீடு பூட்டப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பெண்கள், உடனே கவுரிபிதனூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
கம்பியால் தாக்கி கொலை
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு லட்சுமி தேவியம்மா ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொலை குறித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் குடும்ப தகராறில் கிருஷ்ணப்பா, லட்சுமி தேவியம்மாவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து கவுரிபிதனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஆசிரியர் கிருஷ்ணப்பாவை தேடி வருகின்றனர்.