ஜனநாயகத்தில் பேச, போராட முடியாவிட்டால் எதிர்க்கட்சியாக எவ்வாறு வேலை செய்வது? - காங். தலைவர்


ஜனநாயகத்தில் பேச, போராட முடியாவிட்டால் எதிர்க்கட்சியாக எவ்வாறு வேலை செய்வது? - காங். தலைவர்
x

ஜனநாயகத்தில் பேச, போராட முடியாவிட்டால் எதிர்க்கட்சியாக உங்கள் வேலையை எவ்வாறு செய்வது? என காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

நேஷனல் ஹேரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டெல்லி போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். திருமண மண்டபங்கள், விடுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடைத்துவைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனிடையே, டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களை போலீசார் கடுமையாக கையாண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறுகையில், போலீசார் நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தனர். தடியடி நடத்தி நூற்றுக்கணக்கானோரை கைது செய்தனர். கட்சி தொண்டர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்று கட்சி நிர்வாகிகள் கொடூரமாக தாக்கப்பட்டனர். பெண் எம்.பி.யின் ஆடைகள் கிழிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கை தேவையற்றது. போலீசார் இதற்கு முன்னதாக இதுபோன்ற நடவடிக்கை எடுத்ததில்லை.

சத்தியாகிரக போராட்டம் நடத்துவோம் என 3 நாட்களுக்கு முன்பே தெரிவித்துவிட்டோம். நாங்கள் அமைதியாக பேரணி நடத்த எண்ணினோம். ஆனால், அது தடுக்கப்பட்டது. நாங்கள் எந்த போராட்டத்தையும் நடத்தக்கூடாது என்பதை போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர். ஜனநாயகத்தில் நீங்கள் பேச முடியவில்லையென்றால், நீங்கள் போராட்டம் நடத்த முடியவில்லையென்றால், எதிர்க்கட்சியாக உங்கள் வேலையை நீங்கள் எவ்வாறு செய்தவது?' என்றார்.


Next Story