ராஜஸ்தானில் அரசியல் குழப்பம்: அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 80க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்ய முடிவு?
ராஜஸ்தான் மாநில புதிய முதல் மந்திரி குறித்த சலசலப்பு கிளம்பியுள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராகலாம். இந்நிலையில், அம்மாநில புதிய முதல் மந்திரி குறித்த சலசலப்பு கிளம்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கான போட்டியில் அசோக் கெலாட் உள்ளார்.அதே நேரத்தில் சச்சின் பைலட்டின் பெயரை எம்.எல்.ஏ.க்கள் ஏற்கவில்லை என்பது தெளிவாகிறது.
2020 இல், சச்சின் பைலட் கிளர்ச்சி செய்தார், 18 ஆதரவாளர்களுடன் டெல்லியில் முகாமிட்டார். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேராவின் தலையீட்டால் ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த நிலைப்பாடு தீர்க்கப்பட்டது.
ஜூலை 2020 இல் கெலாட்டுக்கு எதிராக கிளர்ச்சி செய்த போது முதல்வர் அசோக் கெலாட்டின் விசுவாசிகளான 80-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சச்சின் பைலட்டை ஏற்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், அசோக் கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள், எம்எல்ஏ சாந்தி குமார் தரிவால் வீட்டில் குவிந்துள்ளனர். அப்போது அரசுக்கு ஆதரவாக இருந்தவர்களில் இருந்து முதல்மந்திரி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
சச்சின் பைலட் முதல் மந்திரியாகும் பட்சத்தில் 80-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யலாம் என்கிறார்கள்.
மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸின் ராஜஸ்தான் பொறுப்பாளர் அஜய் மாக்கன் ஆகியோர் முன்னிலையில் இரவு 7 மணிக்குத் திட்டமிடப்பட்டிருந்த சட்டமன்றக் கட்சிக் கூட்டம் இன்னும் நடைபெறவில்லை.
இதனால் ராஜஸ்தானில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.