மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி சாவு
சாம்ராஜ்நகர் அருகே மகன் கண்எதிரே மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
கொள்ளேகால்:-
விவசாயி
சாம்ராஜ்நகர் தாலுகா மசனபுரா கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்ட நாயக்கா (வயது 63). விவசாயி. இவரது மனைவி தேவிரம்மா (55). இந்த தம்பதிக்கு 3 மகள்களும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் நஞ்சுண்ட நாயக்கா அந்தப்பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு சென்று வேலை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது மதியம் அவரது மனைவி தேவிரம்மா தனது மகனுடன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கணவருக்கு சாப்பாடு கொண்டு வந்தார். அப்போது, சாப்பாடு பரிமாறுவதற்காக தோட்டத்தில் இருந்த வாழை இலையை அறுத்த தேவிரம்மா, அதனை கழுவ பம்ப்செட் இருந்த இடத்துக்கு சென்றார்.
மின்சாரம் தாக்கி சாவு
அப்போது மின்கசிவு காரணமாக பம்ப்செட் தொட்டியில் கிடந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதனை கவனிக்காமல் தேவிரம்மா, தொட்டியில் கிடந்த தண்ணீரில் வாழை இலையை கழுவ முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் அலறி துடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நஞ்சுண்டநாயக்கா அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
தனது கண்எதிரே பெற்றோருக்கு மின்சாரம் தாக்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களின் மகன் கத்தி கூச்சலிட்டான். அந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்து ேதாட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், பம்ப்செட்டில் மின்இணைப்பை துண்டித்து அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் அதற்குள் மின்சாரம் தாக்கி நஞ்சுண்ட நாயக்காவும், அவரது மனைவி தேவிரம்மாவும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சோகம்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சாம்ராஜ்நகர் புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் மின்சாரம் தாக்கி பலியான 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சாம்ராஜ்நகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.