தெலுங்கானா: எம்.எல்.ஏ. ராஜா சிங்கிற்கு எதிரான போராட்டத்தில் சர்ச்சைக்குரிய கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு
இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தெலுங்கானா எம்.எல்.ஏ. ராஜா சிங் கைது செய்யப்பட்டார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் கோஷ்யமஹல் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. டி ராஜா. இவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நகைச்சுவை கலைஞர் முனாவர் பரூக்கியை விமர்சித்தும், இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்களை மேற்கொள்காட்டியும் பேசினார். அவர் பேசிய வீடியோ 'ஸ்ரீ ராம் சேனல் தெலுங்கானா' என்ற யூடியூப் சேனல் ஒன்றில் வெளியானது. அந்த வீடியோ யூடியூப் நிறுவனத்தால் பின்னர் நீக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகவும், டி ராஜா-வை கைது செய்ய வேண்டும் என இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பாஜக எம்.எல்.ஏ. டி.ராஜாவை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், டி.ராஜாவை கட்சியில் இருந்து பாஜக சஸ்பெண்ட் செய்தது. மேலும், இது தொடர்பாக 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் டி.ராஜாவுக்கு பாஜக உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட டி.ராஜா ஜாமின்கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு டி.ராஜாவை ஜாமின் வழங்கியது. இதையடுத்து, நேற்று அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரது விடுதலையை கண்டித்து இஸ்லாமிய மதத்தினர் நேற்று இரவு முதல் ஐதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் போது சர்ச்சைக்குரிய கோஷங்களும் எழுப்பப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூப் உள்பட சமூகவலைதளத்தில் பிரபலமான சையது அப்தகு கைஜப் என்ற நபர் தலைமையில் எம்.எல்.ஏ. ராஜாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
ஐதராபாத் எம்.பி.யான அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசியின் கட்சியின் சமூகவலைதள பிரிவு தலைவராக இருந்தவர் சையது.
நேற்று அதிகாலை ஐதராபாத் தெற்கு மண்டல துணை கமிஷனர் போலீஸ் அலுவலகம் முன் திரண்ட இஸ்லாமிய மதத்தினர் எம்.எல்.ஏ. ராஜாவை கைது செய்யவேண்டுமென கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, அந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய சையது அப்தகு கைஜப் சர்ச்சைக்குரிய வகையில் கோஷங்களை எழுப்பினார். அவர் எழுப்பிய கோஷங்களை அங்கு கூடியருந்தவர்களும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இறைவனே சிறந்தவன் என அரேபிய மொழியில் கோஷம் எழுப்பிய போராட்டக்காரர்கள், இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதருக்கு எதிராக பேசுபவர்களுக்கு ஒரே ஒரு தண்டனை தான் அது தலை துண்டித்துக்கொலை' என அரேபிய மொழியில் கோஷம் எழுப்பினர். ராஜா சிங் கொல்லப்படுவார் எனவும் கோஷங்களை எழுப்பினர்.
இந்த கோஷங்களை தொடர்ந்து அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர். எம்.எல்.ஏ. ராஜா சிங் ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக ஐதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.