நான் பெயரை மாற்றவில்லை அரசியல்வாதிகளை ஜோக்கர் என நினைக்கிறார்கள்; மத்திய மந்திரி ஷோபா ஆவேசம்
நான் பெயரை மாற்றவில்லை என்றும், அரசியல்வாதிகளை ஜோக்கர் என நினைக்கிறார்கள் என்றும் மத்திய மந்திரி ஷோபா ஆவேசமாக கூறினார்.
மங்களூரு;
தேச விரோத செயல்கள்
மத்திய மந்திரி ஷோபா நேற்று உடுப்பிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பி.எப்.ஐ. அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயிற்சி அளிக்கும் அமைப்பாகும். அந்த அமைப்பு தேசவிரோத செயல்களில் ஈடுபடுகிறது. அந்த அமைப்பு குறித்த ஆதாரங்களை என்.ஐ.ஏ. 3 ஆண்டுகளாக சேகரித்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. ஒரு அரசியல் கட்சி. அந்த கட்சியில் பணியாற்றும் பி.எப்.ஐ. செயல்பாட்டாளர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பி.எப்.ஐ. தங்கள் தொண்டர்களுக்கு ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கும், வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கும் பயிற்சி அளித்தது. இந்த வேலைக்கு சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தியது. சிவமொக்காவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கேப்டன் இல்லாத கப்பல்
துங்கா நதிக்கரையில் அவர்களது சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய தேசியக் கொடியை எரித்து கொண்டாடினர். பி.எப்.ஐ. அமைப்பின் நோக்கம் இந்தியாவை பலவீனப்படுத்துவது தான். இந்தியாவில் இருந்து அனைத்து வசதிகளையும் பெற்று, இந்தியாவுக்கு எதிராக மக்களின் மனநிலை மாற வேண்டும் என்று செயல்படுகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது பற்றி கேட்கிறீர்கள். காங்கிரஸ் சமநிலையை இழந்து விட்டது. அது கேப்டன் இல்லாத கப்பல். காங்கிரஸ் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை செய்யப்பட்டபோது, அக்கட்சிக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்யப்பட்ட பிறகு இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டார்.
ஜோக்கர் என நினைக்கிறார்கள்
சித்தராமையா தனது ஆட்சியில் பி.எப்.ஐ. அமைப்பினர் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றதால், தற்போது கர்நாடகம் பி.எப்.ஐ. அமைப்பின் நிதி மையமாக மாறியது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கேள்வி கேட்கும் தகுதி காங்கிரசுக்கு இல்லை. இந்தியா பிளவுப்பட்ட இடத்திற்கு சென்று ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை நடத்த வேண்டும். பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பியவர்களுடன் ராகுல்காந்தி பேரணி நடத்துவது ஏன்?.
நான் ஷோபா கரந்தலாஜே என்ற ெபயரை ஷோபா கவுடா என்று மாற்றியதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவுகிறது. இது எனக்கு எதிரான பிரசாரம். நான் பெயரை மாற்றவில்லை. அரசியல்வாதிகளை ஜோக்கர் என்று சிலர் நினைக்கிறார்கள். ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், எதிர்க்கட்சிகள் இந்த பிரசாரத்தை நிறுத்துமாறு கேட்டு கொள்கிறேன். இந்த விவாதம் ஏன் தொடங்கியது என்று தெரியவில்லை?. என் பெயரை மாற்ற நான் பைத்தியமாகி விட்டேனா?.
இவ்வாறு அவர் கூறினார்.