சனாதன விவகாரம்: ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தக்கூடாது: மதிப்பு கொடுக்க வேண்டும் - மம்தா பானர்ஜி


சனாதன விவகாரம்:  ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தக்கூடாது: மதிப்பு கொடுக்க வேண்டும் - மம்தா பானர்ஜி
x

வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையாகிய நிலையில், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியிலும அது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டிக்கும் வகையில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-

நான் தமிழ் மக்களையும், ஒட்டுமொத்த தென் மாநில மக்களையும், மு.க. ஸ்டாலினையும் மிகவும் மதிக்கிறேன். ஆனால் அவர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் நான் வைக்கிறேன். இந்தியாவில் உள்ள எல்லா மதங்களுக்கும் ஒவ்வொரு உணர்வு இருக்கிறது. ஏராளமான மதங்களுக்கும், ஜாதிகளுக்கும் இந்தியாவில் இடம் இருக்கிறது.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஜனநாயக நாடு. அதனால் அனைத்து மதத்தினரையும் நாம் மதிக்க வேண்டும். நான் சனாதன தர்மத்திற்கு மதிப்பு கொடுக்கிறேன். சனாதனத்தில் கடவுளுக்கு சேவை செய்யும் எத்தனையோ புரோகிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் மதிப்பளிக்கிறேன்.

பெரும்பான்மை மக்களோ, சிறுபான்மை மக்களோ அவர்களின் உணர்வுகள் புண்படும்படி நாம் பேசுவதை தவிர்க்க வேண்டும். உதயநிதி ஒரு ஜூனியர் அரசியல்வாதியாக இருக்கிறார். அவருக்கு இந்த விஷயங்கள் தெரியாமல் இருக்கலாம். அவர் பேசியதை நானும் கேள்விப்பட்டேன். ஆனால் எந்த அர்த்தத்தில் அவர் அப்படி பேசினார் எனத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், அதுபோன்ற அவர் பேசியிருக்கக் கூடாது. அனைத்து மதங்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதே என் கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story