சாமானிய மக்களும் விமானத்தில் பயணிப்பதை பார்க்கிறேன்; சிவமொக்கா விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்


சாமானிய மக்களும் விமானத்தில் பயணிப்பதை பார்க்கிறேன்; சிவமொக்கா விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்
x

சிவமொக்கா புதிய விமான நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, சாமானிய மக்களும் விமானத்தில் பயணிப்பதை பார்க்கிறேன் என்று பெருமிதத்துடன் கூறினார்.

பெங்களூரு:

புதிய விமான நிலையம்

சிவமொக்காவை அடுத்த சோகானே பகுதியில் புதிதாக விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு விமான நிலையத்தை திறந்து வைத்தார். அது மட்டுமின்றி ரூ.3,600 கோடி மதிப்பீட்டிலான பல வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தின் முன்னேற்ற பாதை ெரயில்வே, சாலைகள், விமான பாதைகள் மற்றும் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் வகுக்கப்பட்டிருக்கிறது. சிவமொக்காவில் புதிய விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட காலத்திற்கு பிறகு இன்று (நேற்று) கர்நாடக மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இது ஒரு விமான நிலையம் மட்டுமல்ல, இளைய தலைமுறையினரின் கனவுகளை நனவாக்கும் திட்டம். எடியூரப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். சமீபத்தில் அவர் சட்டசபையில் பேசிய கருத்துக்கள் பொது வாழ்வில் உள்ள அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. கர்நாடகம் வேகமாக வளா்ந்து வருகிறது. சாலைகள், விமான பாதைகள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளது.

முன்னேற்றத்தின் ரதம்

இரட்டை என்ஜின் அரசு கர்நாடகத்தின் முன்னேற்றத்தின் ரதத்தை இயக்குகிறது. முன்பு பெரிய நகரங்களை மையமாக கொண்ட வளர்ச்சி ஏற்பட்டது. தற்போது இரட்டை என்ஜின் அரசின் கீழ் கர்நாடகத்தில் கிராமங்கள் மற்றும் 2-3-ம் நிலை நகரங்களும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. அதன்படி சிவமொக்கா வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவிலேயே விமான பயண ஆர்வம் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் சிவமொக்காவில் புதிய விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில்தான் 'ஏர் இந்தியா' மிகப்பெரிய அளவில் பயணிகள் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை போட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியின் போது, 'ஏர் இந்தியா' எதிர்மறையான வெளிச்சத்தில் விவாதிக்கப்பட்டது. அதன் அடையாளம் எப்போதும் மோசடிகளுடன் தொடர்புடையதாக இருந்தது. அது நஷ்டம் தரும் வணிக மாதிரியாக கருதப்பட்டது. ஆனால் இன்றைய 'ஏர் இந்தியா' புதிய இந்தியாவின் சாத்தியக்கூறுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அது வெற்றியின் உச்சத்தில் உயர்ந்து வருகிறது.

சாமானிய மக்களும் விமானத்தில் பயணம்

இந்தியாவின் விமான போக்குவரத்து சந்தை விரிவடைந்து வருகிறது. நாட்டிற்கு எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான விமானங்கள் தேவைப்படும், அங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணியாற்ற தேவைப்படுவார்கள். முந்தைய அரசுகளின் அணுகுமுறையை போல் அல்லாமல், தற்போதைய அரசு சிறிய நகரங்களில் விமான நிலையங்கள் தொடங்க முக்கியத்துவம் கொடுக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் கடந்த 2014-ம் ஆண்டு வரை 70 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் பல சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் மேலும் 74 விமான நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. சாதாரண குடிமக்களும் விமானத்தில் பணிக்கும் வகையில் மலிவு விலையில் விமானப் பயணத்தை உறுதி செய்ய 'உதான்' திட்டம் தொடங்கப்பட்டது. ஹாவாய் செருப்பு அணியும் சாமானிய மக்களும் விமானத்தில் பயணிக்க வேண்டும். அது தற்போது நடந்து வருவதை நான் பார்க்கிறேன்.

வளர்ச்சிக்கான கதவுகள்

இந்த புதிய விமான நிலையம், இயற்கை, கலாசாரம் மற்றும் விவசாயத்தின் பூமியான சிவமொக்காவிற்கு வளர்ச்சிக்கான கதவுகளை திறக்கப்போகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் பசுமை, வனவிலங்கு சரணாலயங்கள், ஆறுகள், புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி மற்றும் யானைகள் முகாம், சிம்மதாமில் உள்ள வனவிலங்குகள் சபாரி மற்றும் ஆகும்பே மலை தொடர்களுக்கு பெயர் பெற்ற மலைநாடு பகுதியின் நுழைவாயில் சிவமொக்கா.

சிவமொக்கா நாட்டின் வளமான பகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது. சிவமொக்கா-சிகாரிபுரா-ராணிபென்னூர் புதிய ரெயில் வழித்தட பணிகள் முடிவடைந்தால், ஹாவேரி மற்றும் தாவணகெரே மாவட்டங்களும் பயனடையும். இந்த வழித்தடத்தில் லெவல் கிராசிங் இருக்காது, இது பாதுகாப்பான ரெயில் பாதையாக மாறும். அங்கு விரைவு ெரயில்கள் சீராக இயங்க முடியும். கொட்டகங்கூர் ரெயில் நிலையத்தின் திறன் புதிய பயிற்சி முனையம் கட்டப்பட்ட பிறகு அதிகரிக்கும். தற்போது புதிதாக 4 ரெயில் பாதைகள், 3 நடைமேடைகள் மற்றும் ெரயில்வே பெட்டிகள் பணிமனையுடன் இது உருவாக்கப்படும்.

குடிநீர் இணைப்பு

ஜல் ஜீவன் மிஷன் திட்டம் தொடங்குவதற்கு முன்பு சிவமொகாவில் உள்ள 3 லட்சம் குடும்பங்களில் 90 ஆயிரம் குடும்பங்களுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது. இப்போது, இரட்டை என்ஜின் அரசு 1½ லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகளை வழங்கியுள்ளது. கர்நாடகத்தில் கடந்த 3½ ஆண்டுகளில் 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இரட்டை என்ஜின் அரசு கிராமங்கள், ஏழைகள், நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு சொந்தமானது. தற்போது இந்தியா அம்ரித காலத்தில் உள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கப்படும். உலக அரங்கில் இந்தியாவின் குரல் ஒலிக்கிறது. உலகெங்கிலும் உள்ள தொழில் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். வரும் நாட்களில் கர்நாடகத்தின் வளர்ச்சிக்கான இந்த பணிகள் மேலும் வேகமெடுக்கும். நாம் ஒன்றாக நடைபோட வேண்டும். நாம் ஒன்றாக முன்னேற வேண்டும்.

இவ்வாறு மோடி கூறினார்.

300 பயணிகளை கையாளும் திறன்

புதிதாக திறக்கப்பட்டுள்ள சிவமொக்கா விமான நிலையத்தில் பயணிகள் முனைய கட்டிடம் நிறுவப்பட்டுள்ளது. அங்கு ஒரு மணி நேரத்திற்கு 300 பயணிகளை கையாளும் திறன் உள்ளது. கர்நாடகத்தில் பெங்களூருவுக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய விமான நிலையமாக சிவமொக்கா அமைந்துள்ளது. அங்கு இரவு நேரத்திலும் விமானங்கள் தரையிறங்கும் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவமொக்கா மற்றும் மலைநாடு பகுதியில் உள்ள பிற அண்டை மாவட்டங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தும். இதனால் சிவமொக்கா மட்டுமின்றி அண்டை மாவட்டங்களும் வளர்ச்சி அடையும்.


Next Story