நாடு கடத்தப்பட உள்ள மும்பை தாக்குதல் சதிகாரன் ராணாவை தூக்கில் போட்டால்தான் மகிழ்ச்சி அடைவேன்காயமடைந்த இளம்பெண் பேட்டி


நாடு கடத்தப்பட உள்ள மும்பை தாக்குதல் சதிகாரன் ராணாவை தூக்கில் போட்டால்தான் மகிழ்ச்சி அடைவேன்காயமடைந்த இளம்பெண் பேட்டி
x
தினத்தந்தி 19 May 2023 5:00 AM IST (Updated: 19 May 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

நாடு கடத்தப்பட உள்ள ராணாவை தூக்கில் போட்டால்தான் மகிழ்ச்சி அடைவேன் என மும்பை பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த இளம்பெண் கூறியுள்ளார்.

மும்பை,

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தானை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலில் 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதல் சதிகாரனான பாகிஸ்தானை சேர்ந்த கனடா தொழில் அதிபர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க கோர்ட்டு ஒப்புதல் அளித்து உள்ளது.

இந்த தாக்குதலின்போது வலது காலில் குண்டு காயம் அடைந்த தேவிகா நட்வர்லால் கூறியதாவது:-

சம்பவம் நடந்தபோது நான் 9 வயது சிறுமி. வழக்கில் மிகக்குறைந்த வயதான சாட்சி நான் தான். தாக்குதலின்போது என் மீதும் குண்டு பாய்ந்தது. என் கண்முன்னே பலர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் தொடர்புடைய ராணா இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளார். இதற்கு அனுமதி வழங்கிய அமெரிக்க கோர்ட்டின் உத்தரவை வரவேற்கிறேன். அவர் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவது நல்லது தான். ஆனால் அவர் தூக்கில் போடப்பட்டாலோ அல்லது கடும் தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே நான் மகிழ்ச்சி அடைவேன்.

ராணாவை இங்கு அழைத்து வந்து ஜெயிலில் போடுவதால் எதுவும் நடக்க போவதில்லை. தாக்குதல் தொடர்பான விவரங்கள் அவர் மூலம் வெளி வரவேண்டும். 10 பயங்கரவாதிகள் நமது நகருக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டார்கள். டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து தாக்குதலுக்கு திட்டம் போட்ட பயங்கரவாதி ராணா கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.

அவர் தண்டிக்கப்படுவதை பார்த்து வேறு யாரும் நமது நாட்டில் எந்த பகுதியிலும் பயங்கரவாத செயலில் ஈடுபட முயற்சி செய்ய கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story