எந்த சூழ்நிலையிலும் மக்களுக்காக போராடுவேன்; அவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன் - சச்சின் பைலட்
எந்த சூழ்நிலையிலும் மக்களுக்காக போராடுவேன் என்று துணை முதல் மந்திரி சச்சின் பைலட் கூறினார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் துணை முதல் மந்திரி சச்சின் பைலட்டின் தந்தை மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜேஷ் பைலட் அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது சிலையை திறந்து வைத்தார்.
அதன் பின்னர் சச்சின் பைலட் பேசியதாவது:-
என்னை பொறுத்தவரை மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற வேண்டும் என்பதற்கே நான் முன்னுரிமை அளிப்பேன். மக்களின் நம்பிக்கை மற்றும் அவர்களுக்கு நான் அளித்துள்ள வாக்குறுதிகள் அவையே அரசியலில் எனக்கு மிகப் பெரிய சொத்தாகும். கடந்த 22 ஆண்டுளாக அரசியலில் இருந்து வருகிறேன்.
மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை குறைத்துக் கொள்வது போன்ற ஒரு செயலையும் நான் செய்ததில்லை. இனி வருகிற நாள்களிலும் உங்களது நம்பிக்கை எனது மிகப் பெரிய சொத்தாக இருக்கப் போகிறது. அதை நான் ஒரு போதும் குறைய விட மாட்டேன் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எந்த சூழ்நிலையிலும் மக்களுக்காக போராடுவேன். அவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன்.
ராஜஸ்தான் அரசுப் பணியாளர் தேர்வாணையம் கலைக்கப்பட்டு மீண்டும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும். அரசு வேலைக்கான தேர்வுத் தாள் வெளியானதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.