பா.ஜனதாவின் சதியை முறியடித்து வளர்ச்சி திட்டப்பணிகளை செய்தே தீருவேன்
பா.ஜனதாவின் சதியை முறியடித்து வளர்ச்சி திட்டப்பணிகளை செய்தே தீருவேன் ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
கோலார் தங்கவயல்:-
கோலார் தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதர் பொதுமக்களுக்கு உகாதி பண்டிகையையொட்டி வழங்குவதற்காக அரிசி, வெல்லம், மைதா, துவரம் பருப்பு, பச்சைப்பருப்பு ஆகிய தொகுப்புகளை வழங்க வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூபாகலா சசிதர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தொடர்ந்து மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் பி.இ.எம்.எல்.நகர் பகுதியில் உள்ள ஆலமரத்தில் இருந்து டோல்கேட் வரை உள்ள தார் சாலைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
கோலார் தங்கவயலில் கொரோனா காலக்கட்டத்தில் ஏற்பட்ட வறுமை இன்றுவரை நீடித்து வருகிறது. இந்த மக்களின் வறுமையை போக்குவதற்காக உகாதி பண்டிகையையொட்டி அரிசி, பருப்பு உள்ளிட்ட தொகுப்பு பொருட்கள் வழங்க திட்டமிட்டிருந்தேன். வேண்டுமென்றோ, அரசியல் லாபத்திற்காகவோ பதுக்கி வைக்கவில்லை. இதை உணவு பொருட்கள் வழங்கல் துறைக்கு அறிவித்து சிலர், என் மீது வீன் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். என்னை பழி சொல்லும் பா.ஜனதா கட்சியினர், வெளிப்படையாக சேலை உள்பட பரிசு பொருட்களை இன்றுவரை இலவச பொருட்கள் வழங்கி வருகிறார்கள். சில ஊடகங்களிலும் இது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது. இது தேர்தல் அதிகாரிகள், போலீசாருக்கு தெரியும். ஆனால் ஆளும் கட்சி என்பதால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. நான் நேர்மையான முறையில் பொருட்களை வழங்க நினைத்தால், அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். எனவே பா.ஜனதா கட்சியின் சதியை முறியடித்து நிச்சயம், கோலார் தங்கவயல் தொகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை செய்தே தீருவேன். இதை யாரும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.