காங்கிரசில் எனக்கு உரிய பதவி கிடைக்கும்
காங்கிரசில் எனக்கு உரிய பதவி கிடைக்கும் என்று ஜெகதீஷ் ஷெட்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
பல்வேறு வாய்ப்புகள்
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா போட்டியிட டிக்கெட் கிடைக்காததை அடுத்து முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சேர்ந்து, உப்பள்ளி-தார்வார் தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியை தழுவினார். கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரசில் எனக்கு உரிய பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரசில் சேரும்போது நான் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எனக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் எனக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. இன்னும் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அதனால் எனக்கு பதவி கிடைக்கும்.
முக்கிய வாக்குறுதிகள்
நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. அந்த தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. அடுத்த என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பா.ஜனதா என்னைஒருவரை தோற்கடிக்கபணியாற்றியது. ஆனால்ஒட்டுமொத்தமாக அக்கட்சி தோல்வி அடைந்துள்ளது.
கட்சியில் எனது பங்கு என்ன என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். காங்கிரஸ் எந்த பதவி கொடுத்தாலும் அதை சரியான முறையில் நிர்வகிப்பேன். மந்திரிசபையில் வட கர்நாடகத்திற்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது. முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
மாயமாகிவிட்டனர்
முக்கியமான 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைத்திருக்க வேண்டும். அவரை புறக்கணித்தது சரியல்ல. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பெலகாவியில் சுவர்ண சவுதா கட்டிடம் திறக்கப்பட்டது. அந்த கட்டிட திறப்பு விழாவுக்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியை அழைத்து திறந்தோம். நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறப்பது தான் சரியானது.
எனது தோல்விக்கு காரணம் யார் என்பதை தற்போது பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. எனக்கும், லட்சுமண் சவதிக்கும் மந்திரி பதவி கிடைத்திருக்க வேண்டும். பா.ஜனதாவின் தோல்விக்கு காரணமானவர்கள் மாயமாகிவிட்டனர். பா.ஜனதாவில் தற்போது சரியான தலைவர்கள் இல்லை. தேசிய கட்சியாக இருக்கும் அக்கட்சிக்கு இந்த நிலை வந்திருக்க கூடாது.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.