பா.ஜனதா தலைவர்களின் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன்; சித்தராமையா ஆவேசம்
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்துவதாக கூறும் பா.ஜனதா தலைவர்களின் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பாகல்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நான் சந்தோஷப்பட்டேன்
பா.ஜனதாவின் சாதனை விளக்க மாநாடு தொட்டபள்ளாபுராவில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவதை தைரியம் இருந்தால், `தம்' அதாவது திறன் இருந்தால் காங்கிரஸ் கட்சி தடுக்கட்டும் என்று கூறியுள்ளார். பசவராஜ் பொம்மை பேசும்போது, இருக்கைகள் காலியாக இருந்தன. அந்த காலி நாற்காலிகளை பார்த்து அவர் வீராவேசமாக பேசியுள்ளார். இதை கண்டு நான் சந்தோஷப்பட்டேன்.
அங்கேயே அவரால் தனது திறனை காட்ட முடியவில்லை. எங்களுக்கு சவால் விடும் திறன் அவருக்கு இல்லை. இது அவருக்கும் தெரியும்.
காலியிடங்களை நிரப்பட்டும்
அவருக்கு தைரியம் இருந்தால் முதலில் மந்திரிசபையில் உள்ள காலியிடங்களை நிரப்பட்டும். பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கட்டும். அதன் பிறகு அவரது திறனை பார்க்கலாம். முந்தைய எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நடந்த முறைகேடுகளை பகிரங்கப்படுத்துவதாக பசவராஜ் பொம்மை உள்பட அக்கட்சி தலைவர்கள் பேசியுள்ளனர்.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் இதுவரை இருந்த ஆட்சிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தட்டும். யார் வேண்டாம் என்று சொன்னது. பா.ஜனதா தலைவர்களின் மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். அவர்கள் என்னை இலக்காக வைத்து தாக்குதல் நடத்துகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடும் என்ற பயம் அவர்களுக்கு உள்ளது.
பகிரங்க விவாதத்துக்கு தயாரா?
ஊழல்கள் குறித்து பசவராஜ் பொம்மை பகிரங்க விவாதத்திற்கு தயாரா?. இதற்கு நீங்கள் தயார் என்றால் நாள், நேரத்தை தெரியப்படுத்தினால் அதற்கு நான் தயாராக வருகிறேன். 'தம்' என்றால் 'தம் பிரியாணி' என்று நீங்கள் புரிந்து கொண்டது போல் தெரிகிறது. ஊழல் விஷயங்களை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்ளும் தைரியம் அவருக்கு உள்ளதா?.
அந்த தைரியம் பா.ஜனதாவுக்கு இல்லை. இந்து-முஸ்லிம், கோவில்-மசூதி, ஹிஜாப்-காவி ஆகிய விஷயங்களை வைத்து நீங்கள் பிரசாரம் செய்வீர்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.