ஈத்கா மைதான விவகாரத்தில், சாம்ராஜ்பேட்டை நகரவாசிகள் அமைப்பினர் போராட்டம்; கடைகள் அடைப்பு-போலீஸ் குவிப்பு
ஈத்கா மைதான விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சாம்ராஜ்பேட்டை நகரவாசிகள் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடைகள் அடைக்கப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு: ஈத்கா மைதான விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சாம்ராஜ்பேட்டை நகரவாசிகள் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடைகள் அடைக்கப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முழு அடைப்புக்கு அழைப்பு
பெங்களூரு சாம்ராஜ்பேட்டை பகுதியில் ஈத்கா மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் பக்ரீத், ரம்ஜான் பண்டிகைகளின் போது முஸ்லிம்கள் கூட்டு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற நாட்களில் இந்த மைதானத்தில் வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் ஈத்கா மைதானத்தில் இந்து பண்டிகைகளையும் கொண்டாட மாநகராட்சி அனுமதிக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் ஈத்கா மைதானத்தை வக்பு வாரியம் உரிமை கொண்டாடியது. ஆனால் அந்த மைதானம் மாநகராட்சிக்கு உரியது என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்து இருந்தார். ஆனால் அவர் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டு ஈத்கா மைதானம், வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று கூறினார். இதனால் கடும் கோபம் அடைந்த சாம்ராஜ்பேட்டை நகரவாசிகள் அமைப்பினர் ஈத்கா மைதான விவகாரம் தொடர்பாக 12-ந் தேதி (அதாவது நேற்று) சாம்ராஜ்பேட்டையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்த முழு அடைப்புக்கு 25-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருந்தன.
போராட்டம்
இந்த நிலையில் சாம்ராஜ்பேட்டையில் முழு அடைப்பு நடத்த சாம்ராஜ்பேட்டை போலீசார் அனுமதி கொடுக்க மறுத்தனர். பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினர். இதற்கிடையே ஈத்கா மைதான விவகாரம் தொடர்பாக சாம்ராஜ்பேட்டை எம்.எல்.ஏ. ஜமீர் அகமதுகான் தலைமையில் பேச்சுவார்த்தையும் நடந்தது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி சாம்ராஜ்பேட்டையில் நேற்று சாம்ராஜ்பேட்டை நகரவாசிகள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். நேற்று காலை 8 மணி முதலே ஈத்கா மைதானத்திற்கு சாம்ராஜ்பேட்டை நகரவாசிகள் அமைப்பினர் வந்தனர்.
அதே நேரம் அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர். ஈத்கா மைதானம் முன்பு போராட்டம் நடத்திய சாம்ராஜ்பேட்டை நகரவாசிகள் ஈத்கா மைதானத்தை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும், மைதானத்தின் பெயரை ஜெய சாமராஜ உடையார் என்று மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்து அமைப்பினர் கைது
பின்னர் சாம்ராஜ்பேட்டை நகரவாசிகள் அமைப்பினர் ஈத்கா மைதானத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை என்று கூறினர். இதனால் போலீசாருடன், சாம்ராஜ்பேட்டை நகரவாசிகள் அமைப்பினர் வாக்குவாதம் செய்தனர். இதனால் அவர்களை சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அங்கு இந்து அமைப்பினர் கார்களில் வந்தனர். அவர்கள் நேரடியாக மைதானத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதனால் இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றி சென்றனர். அப்போது போலீசாரை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் சாம்ராஜ்பேட்டை நகரவாசிகள் அமைப்பினர் மீண்டும் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் மைதானத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனால் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்தனர். இதனால் சாம்ராஜ்பேட்டை நகரவாசிகளையும் போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட சாம்ராஜ்பேட்டை நகரவாசிகள் அமைப்பினர் கூறும்போது, 'இந்த மைதான விவகாரத்தில் மாநகராட்சி திடமான முடிவு எடுக்க வேண்டும். இந்த மைதானத்தை அனைத்து சமுதாயத்தினரும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்' என்று கூறினர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஈத்கா மைதானம், சாம்ராஜ்பேட்டை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.