பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுத்தால் காங்கிரசுக்கு பதிலடி
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுத்தால் காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று முன்னாள் மந்திரி சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் கட்சியினர் இழுக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் மந்திரி சி.டி.ரவி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பா.ஜனதா கட்சியில் எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தியில் இருப்பது உண்மை தான். அவர்களது பிரச்சினைகளை சரி செய்யவும், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகிறது. எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தி கட்சிக்குள்ளேயே பேசி தீர்த்து கொள்ளப்படும். இது தீர்க்க முடியாத பிரச்சினை இல்லை. எனவே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள். சோமசேகருடன் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பேசினேன். அவர். பா.ஜனதாவில் இருந்து விலக மாட்டார். காங்கிரஸ் கட்சியில் எந்த எம்.எல்.ஏ.வும் சேர மாட்டார்கள். சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை பலத்தை மக்கள் அளித்திருந்தனர். மக்கள் பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் அரசு, மக்கள் பணிகளில் ஈடுபடுவதில் கவனம் செலுத்துவது நல்லது. ஆசை வார்த்தைகளை கூறி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க நினைத்தால், காங்கிரசுக்கு தக்க பதிலடி கொடுப்போம். நாங்கள் அடித்தால் காங்கிரஸ் எழுந்திருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.