சமூக தீங்குகளை களைய வாய்ப்பு கிடைத்தால்... 5-ம் வகுப்பு மாணவனின் அசத்தல் பதில்


சமூக தீங்குகளை களைய வாய்ப்பு கிடைத்தால்... 5-ம் வகுப்பு மாணவனின் அசத்தல் பதில்
x

இந்தியா பின்னோக்கிய நிலைக்கு செல்லாமல் தடுக்க, சீர்திருத்தவாதியாக எந்த சமூக தீங்கை அழித்து இருப்பீர்கள்? என்ற கேள்விக்கு 5-ம் வகுப்பு மாணவன் அசத்தல் பதில் அளித்து உள்ளான்.



புதுடெல்லி,


சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டரில் வெளியிடப்பட்ட பதிவு ஒன்று சமூக கவனம் பெற்று உள்ளது. மகேஷ்வர் பெரி என்பவர் தனது டுவிட்டர் பதிவில், அவரது 5-ம் வகுப்பு படிக்கும் மகன் தேர்வில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலை பகிர்ந்து உள்ளார்.

அந்த கேள்வியில், சுதந்திர இந்தியாவுக்கு முன் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக நீங்கள் இருந்து, இந்தியா பின்னோக்கி செல்லாமல் தடுக்கும் வகையில், அந்த காலத்தில் இருந்த எந்த சமூக தீங்கை அழித்து இருப்பீர்கள்? ஏன் என்று விளக்கவும்? என கேட்கப்பட்டு இருந்தது.

இதற்கு அந்த சிறுவன், நான் விதவைகள் மறுதிருமணம் சட்டம் தொடங்கி இருப்பேன். ஒரு பெண் விதவையாகி விட்டால், அவர்கள் ஒன்று சதி எனப்படும் உடன்கட்டை ஏற வேண்டும் அல்லது வெள்ளை சேலைகளை உடுத்த வேண்டும்.

அவர்கள் தலைமுடியை பின்ன கூடாது. வெளியே செல்ல கூடாது. இந்த விதவைகள் மீண்டும் திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு சிறந்த மற்றும் மகிழ்ச்சியானதொரு வாழ்வு கிடைக்கும் என பதிலளித்து உள்ளான்.

இதற்கு அந்த ஆசிரியரும் மிக சிறந்த பதில் என குறிப்பிட்டு உள்ளார். நெட்டிசன்களும் சிறுவனையும், பெற்றோரையும் பாராட்டி உள்ளனர். மிக மிக இரக்க மனம் கொண்ட மகனை பெற்றதற்காக நீங்கள் அதிகம் பெருமை அடைவீர்கள் என ஒருவரும், சிறுவனை நன்றாக வளர்த்து இருக்கிறீர்கள் என மற்றொருவர் வாழ்த்தும் தெரிவித்து உள்ளார்.




Next Story