நிதிஷ்குமார் கேட்டால் ஆதரவு தர தயார் - காங்கிரஸ்


நிதிஷ்குமார்  கேட்டால் ஆதரவு தர தயார் - காங்கிரஸ்
x

பீகாரில் ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் கேட்டால் ஆதரவு தர தயார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பாட்னா,

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும் இடம் பெற்று உள்ளது. இந்த கட்சியின் முன்னாள் எம்.பி. ஆர்.சி.பி.சிங், மத்திய மந்திரிசபையிலும் இடம் பெற்றிருந்தார்.

இவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் மத்திய மந்திரி சபையில் யாரும் இடம் பெறவில்லை.

இந்த நிலையில் மத்திய மந்திரி சபையில் மீண்டும் இடம்பெறப்போவதில்லை என ஐக்கிய ஜனதாதளம் தெரிவித்து உள்ளது.

இந்தநிலையில், பீகார் ஆளுநர் பகு சவுகானை சந்திக்க முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சி அமைக்க திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது.

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கேட்டால் காங்கிரஸ் ஆதரவு தர தயாராக உள்ளது. என அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித் ஷர்மா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

நிதிஷ்குமார் வந்தால் வரவேற்போம். அவர் வந்தால் நாங்கள் அவருக்கு ஆதரவளிப்போம். மகாத்பந்தன் கூட்டம் நடைபெறுகிறது. நிதீஷ் குமாரை முதல்-மந்திரியாக ஏற்று அவருக்கு (அவரை) ஆதரவு அளிக்கும் முடிவை எடுக்க வேண்டும். கூட்டத்திற்கு பிறகு தான் இது குறித்து கூற முடியும் என்றார்.

சமீப நாட்களாக பா.ஜனதாவுக்கும், ஐக்கிய ஜனதாதளத்துக்கும் இடையே உரசல்களும் ஏற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story