பெங்களூருவில் சட்டவிரோத லே-அவுட்டுகள் அமைவதை தடுக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு


பெங்களூருவில் சட்டவிரோத லே-அவுட்டுகள் அமைவதை தடுக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் சட்டவிரோத லே-அவுட்டுகள் அமைவதை தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் நடைபெற்ற கலெக்டர்கள் மாநாட்டில் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

கிராம கணக்காளர்கள் கிராம பஞ்சாயத்து பகுதிகளிலேயே தங்கி பணியாற்ற வேண்டும். நில அளவீட்டு பணிகள் முழுவீச்சில் மேற்கொண்டு அது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீா்வு காண வேண்டும். வருவாய்த்துறையில் வரும் விண்ணப்பங்கள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெங்களூருவை சுற்றிலும் உள்ள பசுமை பகுதியில் சட்டவிரோதமாக லே-அவுட்டுகள் அமைக்கப்படுகின்றன.

இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத லே-அவுட்டுகளை கலெக்டர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வருவாய் நிலங்களில் லே-அவுட்டுகள் அமைப்பதை தடுக்க வேண்டும். இதற்கு அனுமதி வழங்கக்கூடாது. பெங்களூருவை சுற்றிலும் சட்டவிரோதமாக லே-அவுட்டுகளை அமைத்து வீடுகளை கட்டியுள்ளனர். இது தொடர்ந்து நடக்கிறது. இதற்கு கடிவாளம் போட வேண்டும்.

812 குக்கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்ற இன்னும் வரைவு திட்டத்தை அனுப்பவில்லை. இந்த பணிகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். வறட்சி நிலவும் 53 தாலுகாக்களில் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணியை விரைவாக முடிக்க வேண்டும். வறட்சி தாலுகாக்கள் குறித்து நாளை (இன்று) நடைபெறும் மந்திரிசபை துணை குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

கலெக்டர்களின் வங்கி கணக்கில் ரூ.511 கோடி உள்ளது. மழையால் சேதம் அடைந்த வீடுகளுக்கு 100 சதவீதம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினை உள்ள பகுதிகளில் டேங்கர்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். கால்நடைகளுக்கு தீவனம் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மக்காசோளம், நெல் பயிர்கள் தீவனத்தை அழிக்காமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவைப்படும் பகுதிகளில் ஆழ்துளை கிணறு தோண்ட நடவடிக்கை எடுக்கலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும். இத்தகைய வழக்குகளில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story