தவறு செய்தவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்


தவறு செய்தவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் தலித் குடும்பத்தினர் மீதான தாக்குதலில் தவறு செய்தவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கழிவறை வசதி

சிக்கமகளூருவில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 10 பேரை ஒரு காபி தோட்ட உரிமையாளர் ஒருவர் கட்டி போட்டி கொடுமை செய்துள்ளார். சி.டி.ரவி எம்.எல்.ஏ.வின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும், தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் அந்த உரிமையாளர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

கழிவறை வசதி இல்லாத அறையில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினரை அடைத்து வைத்துள்ளனர். இந்த தாக்குதலால் குழந்தைகள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பிணி பெண்ணின் கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளனர். சிக்கமகளூரு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. பா.ஜனதா அரசின் ஆதரவு உள்ளதால் தவறு செய்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.

நிவாரணம் வேண்டும்

பாதிக்கப்பட்ட அந்த மக்கள் அச்சத்தில் உள்ளனர். கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் உண்மை தன்மையை போலீசார் கண்டறிய வேண்டும். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். காபி தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அரசு இதுவரை எந்த திட்டத்தையும் அமல்படுத்தவில்லை.

தேர்தல் நேரத்தில் தலித் சமூக மக்களின் வாக்குகளை பெற பா.ஜனதா தலைவர்கள் ஆசை வார்த்தைகளை கூறுகிறார்கள். தேர்தல் முடிந்ததும் அவர்களை கண்டுகொள்வது இல்லை. காபி தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி, ஊட்டச்சத்து உணவு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த தொழிலாளர்கள் அரசுக்கு எதிராக கொதித்தெழும் முன்பு அரசு விழித்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா அந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேச வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story