வெள்ளத்தால் பாதிக்கப்படுவோருக்கு விரைந்து உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு, சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவு
தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்படுவோருக்கு விரைந்து உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவிட்டுள்ளார்.
மங்களூரு-
தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்படுவோருக்கு விரைந்து உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவிட்டுள்ளார்.
தென்மேற்கு பருவமழை
கர்நாடகத்தில் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் மழை பாதிப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி நேற்று தட்சிண கன்னடா மாவட்டத்தில் மழை பாதிப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் மங்களூரு தொகுதி எம்.எல்.ஏ.வும், கர்நாடக சட்டசபை சபாநாயகருமான யு.டி.காதர் தலைமையில் மங்களூருவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரவிக்குமார், மாவட்ட பஞ்சாயத்து அதிகாரி குமார் மற்றும் வருவாய் துறை, தீயணைப்பு துறை உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மழை பாதிப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சபாநாயகர் யு.டி.காதர் ஆலோசனை நடத்தினார். அவர் அதிகாரிகளிடம் கருத்துகளையும் கேட்டறிந்தார். மேலும் அவரும் சில ஆலோசனைகளை வழங்கினார். கூட்டம் முடிந்த பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நிவாரண தொகை
தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. அதிக அளவு மழை வெள்ளம், சூறைக்காற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடும். அவர்களுக்கு எவ்வாறு உதவி செய்வது, பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து கூட்டத்தில் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான உதவிகளை எவ்வாறு செய்து கொடுப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக நிவாரண தொகை ரூ.10 ஆயிரத்தை ஒரு வாரத்திற்குள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட பஞ்சாயத்து தொழில்நுட்ப வல்லுனர் குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் அந்த தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும்.
தேவையான நடவடிக்கைகள்
பாதிக்கப்பட்டோருக்கு 10 நாட்களுக்குள் உரிய உதவிகளை செய்து கொடுக்கவும், நிவாரண உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். அதை மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்திட வேண்டும். மனிதர்கள் மட்டுமல்லாது, கால்நடைகள், வளர்ப்பு பிராணிகளும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடும். அவற்றை மீட்கவும் நடவடிக்கை எடுக்குமாறு தீயணைப்பு துறையினரிடம் அறிவுறுத்தி இருக்கிறேன்.
மேலும் மின்வாரிய ஊழியர்கள் மின்சார வினியோகம் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் கூறியிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.