மழை வெள்ள பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்


மழை வெள்ள பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்
x

கர்நாடகத்தில் மழை வெள்ள பாதிப்புகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு:

மாநாடு

சிக்கமகளூரு வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் லிங்காயத் சமூக மாநாடு நடந்தது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு மடங்களை சேர்ந்த மடாதிபதிகளும் கலந்துகொண்டனர். பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

நாட்டில் சமத்துவத்தை கட்டி காப்பதில் மடாதிபதிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். முன்பு இருந்தே அவர்கள் சமுதாயத்தையும், சமத்துவத்தையும் சிரமப்பட்டு கட்டி காத்து வருகிறார்கள். மாநில அரசும் பசவண்ணர் வழியில் நடந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

உடனடியாக நிவாரணம்

முன்னதாக சிக்கமகளூருவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன். அந்த ஆய்வு அறிக்கை வந்ததும் மழை வெள்ள பாதிப்புகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

அப்போது அவருடன் இருந்த பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி கூறுகையில், காங்கிரசார் சாதி அரசியல் செய்து வருகிறார்கள். ஆனால் நாங்கள் இந்து அரசியல் செய்தால் அதனை திசை திருப்பும் வேலைகளில் காங்கிரசார் ஈடுபடுகிறார்கள் என்றார்.


Next Story