மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தி இருப்பது ஜனநாயகத்திற்கு அவமானம்-சித்தராமையா குற்றச்சாட்டு


மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தி இருப்பது ஜனநாயகத்திற்கு அவமானம்-சித்தராமையா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தி இருப்பது ஜனநாயகத்திற்கு செய்த அவமானம் என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

மைசூரு:

ஆலோசனை கூட்டம்

முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா மைசூருவுக்கு வந்தார். அவர், மைசூரு ரெயில் நிலையம் அருகே உள்ள காங்கிரஸ் பவனத்திற்கு சென்று அங்கு ராகுல் காந்தியின் பாரத்ஜோடா யாத்திரை குறித்து கட்சி தலைவர்கள், உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

பா.ஜனதா அரசு சாதி, மதம் இடையேயான இணைப்பை உடைக்கும் வேலை செய்து கொண்டிருக்கிறது. ஆளும் கட்சி என்பதால் மற்ற கட்சிக்காரர்களுக்கு விருப்பம் இல்லாமல் இருந்தாலும் கூட தாங்களாகவே மதமாற்ற தடை சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். நாட்டில் பா.ஜனதா அரசால் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக வாழ்க்கை நடத்த முடியாத நிலைமை இருக்கிறது,.

மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தி இருப்பது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பு சாசன சட்டத்திற்கும் செய்த அவமானமாகும். தங்களுக்கு விருப்பமுள்ள மதத்தில் சேர்ந்துகொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது. கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன், எஸ்.ஐ.தேர்வு முறைகேட்டில் ஒவ்வொரு நபரிடமும் 10 முதல் 20 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கியுள்ளனர்.

இதன் மூலம் பா.ஜனதா எம்.எல்.ஏ., மந்திரிகள் 600 கோடி வரை பெற்றுள்ளளனர். வேலை ஆசைக்காட்டி அப்பாவி மாணவர்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.

ஊழல் தாண்டவமாடுகிறது

ஊழல் செய்ய விடமாட்டேன், அவை நடக்காதபடி காவல் நிற்பேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். தற்போது பிரதமர் மோடி என்ன செய்து கொண்டிருக்கிறார். கர்நாடகத்தில் ஊழல் தாண்டவம் ஆடுகிறது. என்னுடைய 40 ஆண்டுகால அரசியலில் இதுபோன்ற ஊழல் அரசை பார்க்கவில்லை. நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது. பட்டதாரிகள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் தட்டி கேட்க தான் ராகுல் காந்தி கன்னியாகுமாரியில் இருந்து காஷ்மீர் வரை 3,570 கிலோ மீட்டர் தூரம் வரை பாதயாத்திரை மேற்கொண்டு இருக்கிறார். கர்நாடகத்திற்குள் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை வழியாக வருகிற 30-ந்தேதி பாதயாத்திரை வருகிறது.

இந்த பாதயாத்திரைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் செயல் தலைவர் ஆர்.துருவநாராயணன், மாநில காங்கிரஸ் மகளிர் தலைவி புஷ்பா அமர்நாத், தன்வீர்சேட் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


Next Story