ஆயனூரில் மதுபான பார் காசாளர் கத்தியால் குத்தி கொலை 3 பேர் கைது
ஆயனூரில் மதுபான பார் காசாளர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவமொக்கா-
சிவமொக்கா மாவட்டம் ஆயனூரில் மதுபான பார் உள்ளது. இந்த மதுபான பாருக்கு ஆயனூர் அருகே உள்ள தண்டாவை சேர்ந்த நிரஞ்சன், சதீஷ், அசோக் நாயக் ஆகியோர் இரவு 10 மணிக்கு மது அருந்த சென்றனர். அவர்கள் 3 பேரும் அங்கு மது அருந்தி கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இரவு 11 மணிக்கு மேல் ஆனதால் நிரஞ்சன் உள்பட 3 பேரை வெளியே கிளம்புங்கள் என பார் ஊழியர்கள் கூறினர். அதற்கு அவர்கள் 3 பேரும் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் பார் ஊழியரை தாக்க முயன்றனர். இதுகுறித்து பாரின் காசாளர் சச்சின் (வயது 27) கும்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது மதுபான பாரில் தகராறு செய்தவர்களை போலீசார் விசாரணை நடத்தி கொண்டு இருந்தனர். அதில் நிரஞ்சன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காசாளர் சச்சினை வயிற்றுப்பகுதியில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர்கள் 3 பேரும் போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடினர். அவர்கள் 3 பேரையும் போலீசார் துரத்தி சென்று பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து கும்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.