போக்குவரத்து விதியை மீறியதாக 1½ கோடி வழக்குகள் பதிவு; பெங்களூருவில் ரூ.934 கோடி அபராதம் வசூலாகவில்லை
பெங்களூருவில் விதிமுறைகளை மீறியதாக பதிவான 1½ கோடி வழக்குகளில் ரூ.934 கோடி அபராதம் வசூலாகவில்லை என்று சிறப்பு போலீஸ் கமிஷனர் எம்.ஏ.சலீம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கேமராக்களில் பதிவாகும்...
பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறார்கள். பெங்களூருவில் தினமும் 1 கோடியே 9 லட்சம் வாகனங்கள் சாலைகளில் ஓடுகிறது. அவ்வாறு செல்லும் வாகனங்கள் சிக்னலை மதிக்காமலும், அதிவேகமாகவும், ஹெல்மெட் அணியாமலும் செல்லும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் பிடித்து அபராதம் விதித்து வந்தனர்.
பெங்களூரு போக்குவரத்து சிறப்பு கமிஷனராக எம்.ஏ.சலீம் நியமிக்கப்பட்ட பின்பு வாகன ஓட்டிகளை தடுக்க கூடாது என்றும், சிக்னல்களில் இருக்கும் நவீன கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலமாக வழக்குப்பதிவு செய்யும்படியும் உத்தரவிட்டு இருந்தார். அது வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியை கொடுத்தாலும், கேமராக்களை பார்த்து வழக்குப்பதிவு செய்வது அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது.
ரூ.934 கோடி அபராதம் பாக்கி
பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பதிவாகும் வழக்குகளில் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதம் வசூல் செய்யப்படாமல் இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 50 சதவீத தள்ளுபடியில் வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. அப்போது ரூ.130 கோடிக்கும் மேல் அபராதம் வசூலாகி இருந்தது.
அப்படி இருந்தும் பெங்களூருவில் பதிவான 1½ கோடிக்கும் மேற்பட்ட விதிமுறைகள் மீறல் வழக்குகளில் ரூ.934 கோடி அபராதம் செலுத்தாமல் வாகன ஓட்டிகள் பாக்கி வைத்துள்ளனர். போலீசாரும் அந்த அபராத தொகையை வசூலிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதையடுத்து, பெங்களூருவில் வசூலாகாமல் இருக்கும் அபராத தொகையை வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்க போக்குவரத்து போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.
1½ கோடி வழக்குகள்
கடந்த 2021-ம் ஆண்டு பெங்களூருவில் விதிமுறைகளை மீறியதாக 93 லட்சத்து 5 ஆயிரத்து 857 வழக்குகளும், 2022-ம் ஆண்டு ஒரு கோடியே 4 லட்சத்து 49 ஆயிரத்து 571 வழக்குகளும், கடந்த மார்ச் மாதம் வரை 10 லட்சத்து 4 ஆயிரத்து 763 வழக்குகளும் பதிவாகி இருந்தது. அவற்றில் 1½ கோடி வழக்குகளில் வாகன ஓட்டிகள் இன்னும் அபராதம் செலுத்தவில்லை. அந்த வழக்குகளில் தான் ரூ.934 கோடி வசூலிக்காமல் இருப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போக்குவரத்து சிறப்பு கமிஷனர் எம்.ஏ.சலீம் கூறுகையில், தற்போது சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் பாக்கி வைத்திருக்கும் அபராத தொகையை வசூலிக்க புதிய திட்டம் கொண்டு வந்து செயல்படுத்தப்படும். கூடிய விரைவில் அந்த திட்டத்தை செயல்படுத்தி வாகன ஓட்டிகளிடம் இருந்து பாக்கி வைத்திருக்கும் அபராத தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை எக்காரணத்தை கொண்டும் மீறக்கூடாது என்றார்.