பண்ட்வாலில் கடத்தப்பட்ட மைனர் பெண் மீட்பு
பண்ட்வாலில் கடத்தப்பட்ட மைனர் பெண்ணை போலீசார் மீட்டனர். மேலும் கடத்திய வாலிபரை வலைவீசி தேடிவருகின்றனர்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வாலில் மைனர் பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாா். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மைனர் பெண்ணின் பெற்றோர், புஞ்சலகட்டே போலீசில் புகார் ஒன்று அளித்தனர்.
அந்த புகாரில் எங்களது மகளை நவ்ஷத் என்பவர் கடத்தி சென்றுவிட்டார் என்றும், கண்டுபிடித்து தரும்படியும் குறிப்பிட்டிந்தனர். இந்த புகாரை ஏற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நவ்ஷத்தையும், மைனர் பெண்ணையும் தேடிவந்தனர்.
இந்த நிலையில் மைனர் பெண், உப்பினங்கடியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் உப்பினங்கடி போலீசார், புஞ்சலகட்டே போலீசாருடன் இணைந்து சென்று மைனர் பெண்ணை மீட்டனர். ஆனால் அவருடன் நவ்ஷத் இல்லை என்று கூறப்படுகிறது. போலீசார் வருவதை அறிந்து மைனர் பெண்ணை, நஷ்வத் அங்கேயே விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார், மைனர் பெண்ணை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதைதொடர்ந்து மைனர் பெண்ணை காப்பகத்தில் சேர்த்தனர். தலைமறைவாக உள்ள நவ்ஷத்தை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.