காசோலை மோசடி வழக்கில்மூடிகெரே தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு பிடிவாரண்டு
சிக்கமகளூரு-
காசோலை மோசடி வழக்கில் மூடிகெரே தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. குமாரசாமிக்கு பெங்களூரு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
காசோலை மோசடி வழக்கு
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக குமாரசாமி இருந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊவப்பகவுடா என்பவரிடம் குமாரசாமி எம்.எல்.ஏ. கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஊவப்பகவுடா கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு வந்துள்ளார். இந்தநிலையில் குமாரசாமி எம்.எல்.ஏ., ஊவப்பகவுடாவிடம் 8 காசோலைகளை கொடுத்துள்ளார். அந்த காசோலைகளை அவர் வங்கியில் செலுத்தினார். ஆனால் அந்த 8 காசோலைகளில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து அவர் குமாரசாமியிடம் கேட்டார். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.
இதையடுத்து ஊவப்பகவுடா காசோலை மோசடி என பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் காசோலை மோசடியில் குமாரசாமி எம்.எல்.ஏ.வுக்கு ரூ.1 கோடியே 38 லட்சத்து 65 ஆயிரம் ஊவப்பகவுடாக்கு கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கவில்லை என்றால், ஒரு மாதத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்தநிலையில் ஒரு மாதம் ஆகியும் அவர், ஊவப்பகவுடாவுக்கு பணத்தை கொடுக்கவில்லை.
குமாரசாமி எம்.எல்.ஏ.வுக்கு பிடிவாரண்டு
இந்தநிலையில் நேற்று முன்தினம் பெங்களூரு கோர்ட்டு மூடிகெரே தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. குமாரசாமிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்தநிலையில் அவருக்கு சட்டசபை தேர்தலில் நிற்பதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மூடிகெரே பகுதியில் பணம், மற்றும் பரிசு பொருட்களை பொதுமக்களுக்கு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மூடிகெரே தொகுதி தேர்தல் ஆணைய அதிகாரி ராஜேஷ் அங்கு சென்றார். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் குமாரசாமி எம்.எல்.ஏ. மீது தேர்தல் வீதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காசோலை மோசடி வழக்கில் குமாரசாமி எம்.எல்.ஏ. கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.