தேர்தல் முறைகேடு வழக்கில் .எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏவுக்கு நோட்டீஸ்


தேர்தல் முறைகேடு வழக்கில் .எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏவுக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் முறைகேடு வழக்கில் எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ.வுக்கு நோட்டீஸ் அனுப்பி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு

எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ.

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சி மூத்த தலைவரும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகனுமான எச்.டி.ரேவண்ணா கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிபுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயாஸ் பட்டீல் சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். எச்.டி.ரேவண்ணா முறைகேடு செய்து தேர்தலில் வெற்றி பெற்றதாகவும், அதனால் அவரது வெற்றியை ரத்து செய்யுமாறும் கோரி சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்த தேவராஜ்கவுடா என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நோட்டீஸ்

மேலும் காங்கிரஸ் வேட்பாளரும் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி முறைகேடு செய்துள்ளார் என்றும் மனுவில் அவர் தெரிவித்துள்ளார். அதனால் அந்த தொகுதியில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்குமாறு அவா் கோரியுள்ளார்.

இந்த மனு மீது நேற்று ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. அப்போது, எச்.டி.ரேவண்ணா, காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயாஸ் பட்டீல் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

ஏற்கனவே கடந்த 31-ந்தேதி தான் தேர்தல் பிரமாண பத்திரத்தில் முறைகேடு செய்திருப்பதால் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் தேர்தல் முறைகேடு வழக்கில் ரேவண்ணாவுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story