பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் இருவரை கத்தியால் குத்திய வழக்கில் 4 பேர் கைது
உப்பள்ளி அருகே பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் இருவரை கத்தியால் குத்திய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உப்பள்ளி;
தார்வாா் மாவட்டம் உப்பள்ளி கசபா பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் முகமது ரபீக் மற்றும் இர்பான் பேபாரி. இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கசபா பகுதியில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறில் இருவரும் தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஒருவருக்கொருவர் குத்தி கொண்டனர்.
இதில் முகமது ரபீக் மற்றும் இர்பான் ஆகிய இருவரும் கத்தி குத்தி காயம் அடைந்து உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இதுகுறித்து கசபா பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்ட உப்பள்ளி மெகபூப் நகர் பகுதியை சேர்ந்த காதர் பாட்ஷா (வயது 24), முஹம்மது சாதிக் (22), காஜா மோகிதீன் (22) மற்றும் பிலால் (24) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.