சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. மீது 1,406 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் மீது 1,406 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் அம்ருத்பால் முறைகேடு செய்ய லஞ்சம் வாங்கியதாக தகவல் இடம் பெற்றுள்ளது.
பெங்களூரு;
அம்ருத்பால் கைது
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 3-ந் தேதி 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் (எஸ்.ஐ.) பணிகளுக்கு தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி இருந்தது. தேர்வு முடிவுகள் வெளியானதும் தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. அதாவது தேர்வர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பணம் வாங்கி கொண்டு அவர்களை வெற்றி பெற வைத்தது தெரியவந்தது.
இந்த வழக்கு குறித்து சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த முறைகேடு தொடர்பாக கர்நாடக காவல்துறை ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமார் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், முறைகேடு செய்து தேர்வு எழுதியவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என 80-க்கும் மேற்பட்டோரை கைது செய்து இருந்தனர்.
1,406 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த வழக்கு தொடர்பாக 18 தேர்வர்கள் உள்பட 30 பேர் மீது கடந்த ஜூலை 26-ந் தேதி சி.ஐ.டி. போலீசார், பெங்களூரு 1-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து இருந்தனர். ஆனால் அந்த குற்றப்பத்திரிகையில் அம்ருத் பாலின் பெயர் இடம்பெறவில்லை. இது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்தது.
இந்த வழக்கில் இருந்து அம்ருத்பாலை தப்பிக்க வைக்க முயற்சி நடப்பதாகவும் எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் அம்ருத்பால் மீது 1,406 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை நேற்று முன்தினம் கோர்ட்டில் சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்து உள்ளனர். 38 சாட்சியங்கள், 78 ஆவணங்களின் அடிப்படையில் அம்ருத்பால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லஞ்சம் வாங்கியதாக தகவல்
மேலும் தேர்வர்களிடம் இருந்து ரூ.5 கோடி லஞ்சம் வசூலித்து தரும்படி சாந்தகுமாரிடம் அம்ருத்பால் கூறியதாகவும், சாந்தகுமார் ரூ.1.35 கோடியை அம்ருத்பாலிடம் கொடுத்து இருந்ததாகவும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்று உள்ளது.
சாந்தகுமாரிடம் இருந்து பெற்ற ரூ.1.35 கோடியை தனது ஆதரவாளர்களான சம்புலிங்கய்யா, ரக்சயா சாமியிடம் அம்ருத்பால் கொடுத்து உள்ளார். அவர்களிடம் ரூ.41 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து உள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரூ.1.35 கோடியை பெற்று கொண்டு வினாத்தாள்கள் இருந்த அறையின் சாவியை சாந்தகுமாரிடம், அம்ருத்பால் கொடுத்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.