சிக்கமகளூருவில் போலி தங்கநாணயம் விற்று வியாபாரியிடம் மோசடி; 3 பேர் கைது
சிக்கமகளூருவில், போலி தங்க நாணயம் விற்று வியாபாரியை மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு;
தங்க நாணயம் என கூறி...
சிக்கமகளூரு டவுன் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். வியாபாரியான இவருக்கு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிக்கமகளூருவில் உள்ள தோட்டம் ஒன்றில் வைத்து விஜயநகர் மாவட்டம் ஹரப்பனஹள்ளி பகுதியை சேர்ந்த சீனிவாஸ் நாயக் என்ற சீனா (வயது 21) என்பவர் அறிமுகமாகினார். அப்போது சீனிவாசுடன், அவரது நண்பர்களான கோடேஸ்நாயக் (28), வெங்கடேஷ் நாயக் (20) ஆகியோர் வந்திருந்தனர். இவர்கள் 3 பேரும் மகேசிடம், தங்களிடம் 2 கிலோ தங்க நாணயம் உள்ளது.
அதை குறைவான விலையான ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்ய உள்ளோம். நீங்கள் வேண்டும் என்றால் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறினர். அதன்படி சோதனைக்காக 2 தங்க நாணயங்களை அவரிடம் காண்பித்தனர். அதை மகேஷ் வாங்கி சோதனை செய்ததில், அது. தங்க நாணயம் என்பது தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து அந்த தங்க நாணயங்களில் சிலவற்றை வாங்க முடிவு செய்தார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு சிக்கமகளூருவிற்கு வந்த 3 பேரும் மகேசை சந்தித்து 20 நாணயங்களை கொடுத்தனர். பின்னர் ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் ரூ.5 ஆயிரம் வாங்கி கொண்டு அங்கிருந்து சென்றனர். இந்த நாணயங்களை வாங்கிய மகேஷ், நகை ஆசாரியிடம் கொடுத்து சோதனை செய்தார்.
அதில் அது செம்பு நாணயம் என்பது தெரியவந்தது. இதனால் மோசடிக்குள்ளானதை அறிந்த மகேஷ் சிக்கமகளூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.95 கிலோ செம்பு நாணயம், செல்போன், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.