சிக்கமகளூருவில் சி.டி.ரவிக்கு ஆதரவாக மத்திய மந்திரி எல்.முருகன் பிரசாரம்
சிக்கமகளூருவில் சி.டி.ரவிக்கு ஆதரவாக மத்திய மந்திரி எல்.முருகன் பிரசாரம் செய்தார்.
சிக்கமகளூரு-
சிக்கமகளூருவில் சி.டி.ரவிக்கு ஆதரவாக மத்திய மந்திரி எல்.முருகன் பிரசாரம் செய்தார். தமிழர்களுடன் தரையில் அமர்ந்து அவர் வானொலியில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியை கேட்டார்.
சட்டசபை தேர்தல்
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இந்தநிலையில் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மத்திய மந்திரி எல்.முருகன்சிக்கமகளூருவுக்கு வந்தார். அவருக்கு பா.ஜனதா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சிக்கமகளூரு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சி.டி.ரவிக்கு ஆதரவாக கைமரம், ஒசப்பேட்டை பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
சிக்கமகளூருவில் சி.டி.ரவி எம்.எல்.ஏ.வின் முயற்சியால் மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் சிமெண்டு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. குடி நீர் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் இந்த தொகுதி முழுவதும் செய்யப்பட்டுள்ளது.
வாக்குகள் வித்தியாசத்தில்...
எனவே வருகிற சட்டசபை தேர்தலில் சி.டி.ரவியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து சிக்கமகளூரு ஒசப்பேட்டை பகுதியில் வசித்து வரும் தமிழரான அமாவாசை என்பவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் 'மனதின் குரல்' 100-வது நிகழ்ச்சியை கேட்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மத்திய மந்திரி எல்.முருகன் பிரசார வாகனம் மூலம் அங்கு சென்றார். அப்போது நிகழ்ச்சிக்கு நேரம் ஆகிவிட்டதால் காபி தோட்டத்தில் உள்ள காபி கொட்டைகளை உலர வைக்கும் களத்திலேயே மத்திய மந்திரி எல்.முருகன் அப்பகுதியை சேர்ந்த தமிழர்களுடன் அமர்ந்து காலை 11 மணிக்கு பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்ச்சியை வானொலி மூலம் கேட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'பிரதமர் மோடியின் 100-வது 'மனதின் குரல்' அனைத்து ஏழை, எளியோர் மற்றும் வாகன ஓட்டிகள் உடன் அவர் ஒன்று சேர்ந்து பேசியதை மலைநாடு பகுதியாகிய இந்த கிராமத்தில் கேட்பதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி உள்ளது.
சாமி தரிசனம்
வருகிற சட்டசபை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பா.ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார். அவருடன் பா.ஜனதா பிரமுகர் சங்கர் மஞ்சுநாத் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய மந்திரி எல்.முருகன் சிக்கமகளூரு தமிழ் காலனியில் உள்ள கருமாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.