உப்பள்ளியில் விவசாயியிடம் ரூ.4 லட்சம் மோசடி
உப்பள்ளியில் விவசாயியிடம் ரூ.4 லட்சத்தை மர்மநபர்கள் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.
உப்பள்ளி-
தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா பண்டிவாடா கிராமத்தை சேர்ந்தவர் நிங்கப்பா அசுண்டி. இவருக்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. அதில், நிங்கப்பா விவசாயம் செய்து வருகிறார். இந்தநிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் தான் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பேசுவதாகவும், என்னிடம் தானிய விதைகள் சுத்தம் செய்யும் எந்திரம் குறைந்த விலைக்கு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய நிங்கப்பா அவர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூ.4 லட்சத்து 11 ஆயிரத்தை அனுப்பினார். ஆனால் அந்த நபர் கூறியபடி விவசாயிக்கு தானிய விதைகள் சுத்தம் செய்யும் எந்திரத்தை அனுப்பி வைக்கவில்லை.
இந்தநிலையில், அந்த நபரை நிங்கப்பா தொடர்பு கொண்டார். ஆனால் அவரது எண் சுவிட்ச்- ஆப் என வந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிங்கப்பா உப்பள்ளி புறநகர் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மர்மநபரை வலை வீசி தேடி வருகிறார்கள்.