கா்நாடகத்தில் மந்திரிகள், ரூ.26 லட்சம் கார்களை பயன்படுத்த அரசு அனுமதி
கா்நாடகத்தில் மந்திரிகள், ரூ.26 லட்சம் கார்களை பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் தாங்கள் பயன்படுத்துவதற்கு சொகுசு கார்களை வாங்குவதற்கு கர்நாடக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் இதுவரை ரூ.23 லட்சம் மதிப்பிலான கார்களை பயன்படுத்தி வந்தனர். இனிமேல் மந்திரிகள், எம்.பி.க்கள் ரூ.26 லட்சம் மதிப்பிலான சொகுசு கார்களை பயன்படுத்த அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. அதுபோல், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ரூ.18 லட்சம் மதிப்பிலான கார்களை பயன்படுத்த அனுதி வழங்கி அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
இதுதவிர கூடுதல் செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், ஒவ்வொரு துறையின் முக்கிய செயலாளர்கள் ரூ.14 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பிலான கார்களை வாங்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், மந்திரிகள், எம்.பி.க்களுக்கு வாங்கப்படும் கார்களுக்கு, அடிக்கடி பழுது பார்க்கும் செலவுகள் வராமல் கவனித்து வாங்கி வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.