கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரி தேர்வு முடிகள் வெளியீடு; மாணவர்களை விட மாணவிகளே சாதனை


கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரி தேர்வு முடிகள் வெளியீடு; மாணவர்களை விட மாணவிகளே சாதனை
x

கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரி தேர்வில் 74.67 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே இந்த முறையும் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பெங்களூரு:

பி.யூ. கல்லூரி பொதுத்தேர்வு

கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரி 2-வது ஆண்டுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம்(மார்ச்) 9-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் திருத்தும் பணிகள் கடந்த 5-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெற்றது. வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளி கல்வித்துறை தயாரானது.

சட்டசபை தேர்தல் காரணமாக மே மாதம் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரி 2-வது ஆண்டுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மண்டலத்தின் தலைவரான ராமசந்திரா தேர்வு முடிவுகளை வெளியிட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

74.67 சதவீதம் பேர் தேர்ச்சி

கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரி 2-வது ஆண்டுக்கான பொதுத்தேர்வை 7 லட்சத்து 2 ஆயிரத்து 67 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில், 6 லட்சத்து 7 ஆயிரத்து 489 மாணவர்கள் கல்லூரிகளில் படித்து தேர்வு எழுதி இருந்தனர். மறுதேர்வை எழுதியவர்கள் 69 ஆயிரத்து 870 பேர் ஆவார்கள். தனித்தேர்வர்கள் 24 ஆயிரத்து 708 பேர் தேர்வு எழுதி இருந்தனர். கடந்த 5-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் 65 மையங்களில் 23 ஆயிரத்து 606 பேர் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த ஆண்டு பி.யூ. கல்லூரி தேர்வு எழுதியவர்களில் 5 லட்சத்து 24 ஆயிரத்து 209 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 746 நடப்பாண்டில் படித்து தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் ஆவர். மறுதேர்வு எழுதியவர்கள் 33 ஆயிரத்து 833 பேரும், தனித்தேர்வர்கள் 10 ஆயிரத்து 630 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் ஒட்டு மொத்தமாக பி.யூ. தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி 74.67 சதவீதம் ஆகும்.

மாணவிகள் 80 சதவீதம்

கலை பாடங்களை எழுதிய 2 லட்சத்து 20 ஆயிரத்து 305 பேரில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 876 பேரும், வணிக பாடங்களை எழுதிய 2 லட்சத்து 40 ஆயிரத்து 146 பேரில், 1 லட்சத்து 82 ஆயிரத்து 246 பேரும், அறிவியல் பாடங்களை எழுதிய 2 லட்சத்து 41 ஆயிரத்து 616 பேரில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 87 பேரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிகஅளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

ஒட்டு மொத்தமாக 3 லட்சத்து 49 ஆயிரத்து 901 மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 607 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 69.05 சதவீதம் ஆகும். அதுபோல், 3 லட்சத்து 52 ஆயிரத்து 166 மாணவிகள் தேர்வு எழுதி இருந்தார்கள். அவர்களில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 602 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் மாணவிகள் 80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கிராமப்புறங்களில் அதிகம்

கடந்த ஆண்டு பி.யூ. கல்லூரி தேர்வில் 55.22 மாணவர்களும், 68.72 மாணவிகளும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோன்று நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களிலேயே மாணவ, மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, நகர்ப்புறங்களில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 807 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 349 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கிராமப்புறங்களில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 260 பேர் தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 960 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது நகர்ப்புறங்களில் 74.63 சதவீத மாணவ, மாணவிகளும், கிராமப்புறங்களில் 74.79 சதவீத மாணவ, மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு (2022) கூட கிராமப்புறங்களில் 62.18 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 61.78 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.

ஆங்கிலத்தில் தேர்வு எழுதிய...

கன்னட வழியில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 727 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 221 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கில வழியில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 340 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 3 லட்சத்து 40 ஆயிரத்து 988 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது கன்னடத்தில் தேர்வு எழுதியவர்கள் 63.68 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் தேர்வு எழுதிய 82.30 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

85 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுத்து 1 லட்சத்து 9 ஆயிரத்து 509 பேரும், 60 முதல் 85 சதவீதம் வரை 2 லட்சத்து 47 ஆயிரத்து 315 பேரும், 50 முதல் 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்து 90 ஆயிரத்து 14 பேரும், 50 சதவீதத்திற்கு குறைவாக 77 ஆயிரத்து 371 பேரும் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தட்சிண கன்னடா முதலிடம்

பி.யூ. கல்லூரி தேர்வில் தட்சிண கன்னடா மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அந்த மாவட்டம் 95.33 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 2-வது இடத்தில் உடுப்பி மாவட்டம் உள்ளது. அங்கு 95.24 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3-வது இடத்தில் குடகு மாவட்டம் பிடித்துள்ளது. அந்த மாவட்டத்தில் 90.55 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடைசி இடத்தை யாதகிரி மாவட்டம் பெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் 62.98 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு கல்லூரிகளில் படித்து தேர்வு எழுதிய 2 லட்சத்து 29 ஆயிரத்து 329 மாணவ, மாணவிகளில், 1 லட்சத்து 45 ஆயிரத்து 919 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படித்து தேர்வு எழுதிய 1 லட்சத்து 15 ஆயிரத்து 448 பேரில் 82 ஆயிரத்து 229 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் மனஅழுத்தத்திற்கு உட்பட வேண்டாம். அவர்கள் மறுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் ரித் சிங் உடன் இருந்தார்.

கலை பாடப்பிரிவில் 593 மதிப்பெண்கள்

பி.யூ. கல்லூரி 2-வது ஆண்டு பொதுத்தேர்வில் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த மாணவி தபசுசம் சேக் கலை பாடப்பிரிவில் 600-க்கு 593 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். வணிக பாடப்பிரிவில் தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரியைச் சேர்ந்த அனன்யா 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்திருக்கிறார். அறிவியல் பாடப்பிரிவில் கோலார் மாவட்டம் சீனிவாசப்புராவில் உள்ள கல்லூரியில் படித்த எஸ்.எம்.கவுசிக் 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

100-க்கு 100 எடுத்த மாணவர்கள்

பி.யூ. 2-வது ஆண்டு பொதுத்தேர்வில் பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து மாணவ, மாணவிகள் சாதனை படைத்திருக்கிறார்கள். அதன்படி, கன்னடத்தில் 1,083 பேரும், ஆங்கிலத்தில் 2 பேரும், இந்தியில் 33 பேரும், உருதுவில் 33 பேரும், வரலாற்றில் 274 பேரும், அரசியல் அறிவியலில் 218 பேரும், கணிதத்தில் 2 ஆயிரத்து 704 பேரும், கணக்குப்பதிவியலில் 3 ஆயிரத்து 475 பேரும், இயற்பியலில் 1 ஆயிரத்து 599, வேதியியலில் 324 பேரும், உயிரியலில் 95 பேரும், கம்ப்யூட்டர் சயின்சில் 5 ஆயிரத்து 335 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.

100 சதவீத தேர்ச்சி பெற்ற கல்லூரிகள்

கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரி பொதுத்தேர்வில் 42 அரசு கல்லூரிகளில் 100 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு உதவி பெறும் 10 கல்லூரிகளில் 100 சதவீத தேர்ச்சியும், அரசு உதவி பெறாத 264 தனியார் கல்லூரிகளில் படித்த மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

மறு கூட்டலுக்கு 3-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

கர்நாடகத்தில் பி.யூ. பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்வில் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க வருகிற 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விடைத்தாள்களை பெறுவதற்காக வருகிற 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இந்த விடைத்தாள்களை வாங்கியவர்கள் மட்டும மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.1,670 கட்டணமும், விடைத்தாள்களை பெறுவதற்கு ரூ.530 கட்டணமும் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story