கர்நாடகத்தில் ஆசிரியர் தேர்வு முறைகேட்டில் 38 பேர் கைது


கர்நாடகத்தில் ஆசிரியர் தேர்வு முறைகேட்டில் 38 பேர் கைது
x

கர்நாடகத்தில் ஆசிரியர் தேர்வு முறைகேட்டில் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு: கர்நாடகத்தில் நடந்த ஆசிரியர் தேர்வு முறைகேட்டில் 38 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 மாவட்டங்களில் சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் 38 பேரும் சிக்கி இருந்தார்கள்.

ஆசிரியர்கள் தேர்வுகளில் முறைகேடு

கர்நாடகத்தில் கடந்த 2012-13-ம் ஆண்டிலும், 2014-15-ம் ஆண்டிலும் ஆசிரியர் பணிகளுக்கான தேர்வுகள் நடந்திருந்தது. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு உள்ளிட்ட பிற அரசு பணிகளுக்கான தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் அம்பலமானதால், ஆசிரியர்கள் பணிக்கான தேர்வுகளிலும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதுதொடர்பாக பெங்களூரு விதானசவுதா போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும், அல்சூர் கேட் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. பின்னர் ஆசிரியர்கள் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.ஐ.டி. விசாரணை நடத்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். அதன்பேரில், ஆசிரியர் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

38 ஆசிரியர்கள் கைது

இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு முறைகேடு தொடர்பாக பெங்களூரு உள்பட 4 மாவட்டங்களில் சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது கடந்த 2012-13-ம் ஆண்டு மற்றும் 2014-15-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்வுகளின் போது பணம் கொடுத்தும், போலி ஆவணங்களை கொடுத்தும் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்த 38 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த ஆசிரியர்களின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. ஆசிரியர்கள் தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள் என்றும், முறைகேடு சம்பந்தமாக மாநிலம் முழுவதும் தொடர் சோதனை நடத்தப்படும் என்றும் சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story