கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியீடு
கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடபட்டன. இதில் தட்சிண கன்னடா மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
மங்களூரு-
கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடபட்டன. இதில் தட்சிண கன்னடா மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு
கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்தன. இந்த நிலையில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை https://karresults.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை 10 மணிக்கு பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகளை கல்வித்துறை வெளியிட்டது. இதில் தட்சிண கன்னடா மாவட்டம் 95.33 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தையும், உடுப்பி மாவட்டம் 95.24 சதவீதத்துடன் 2-ம் இடத்தையும் பிடித்தன. 90.55 சதவீத தேர்ச்சியுடன் குடகு மாவட்டம் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. வணிகவியல் பிரிவில் மூடபித்ரி தனியார் கல்லூரி மாணவி அனன்யா மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
மாநில அளவில் 2-ம் இடம்
பெங்களூருவை சேர்ந்த தபசும் ஷேக் மற்றும் கோலாரைச் சேர்ந்த கவுசிக் ஆகியோர் கலை-வணிகப் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த 4 மாணவர்கள் அறிவியல் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளனர். தனியார் கல்லூரியை சேர்ந்த சாத்விக் பத்மநாப பட், ஜெஸ்விதா டயஸ் ஆகியோர் 595 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடத்தை பெற்றனர். உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவி நேஹா ஜெ.ராவ் , கார்கலாவில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த ஸ்மயா சதானந்த மாபென் ஆகியோர் 594 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தை பிடித்தனர்.