கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு மறுதேர்வு எப்போது?
கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மறுதேர்வு நடப்பது எப்போது என்பதற்கு போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் பதில் அளித்து உள்ளார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மறுதேர்வு நடப்பது எப்போது என்பதற்கு போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் பதில் அளித்து உள்ளார்.
தேர்வு முறைகேடு
கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பால் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
முறைகேடு நடந்து உள்ளதால் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. ஆனால் மறுதேர்வு நடத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மறுதேர்வுக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையும் நடந்து வருகிறது.
இறுதி குற்றப்பத்திரிகை
இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மறுதேர்வு நடத்தப்படுவது குறித்து கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட்டிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில் கூறியதாவது:-
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி சி.ஐ.டி. போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அடுத்த மாதத்திற்குள் (அக்டோபர்) இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதன்பின்னர் மறுதேர்வு தேதி அறிவிக்கப்படும். மறுதேர்வு நடத்த அரசு தயாராக உள்ளது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மறுதேர்வுக்கு எதிரான வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இதனால் இதுபற்றி மேலும் எதுவும் கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.