குடகில் உணவு தேடி வந்தபோது குட்டையில் விழுந்த குட்டி யானை 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்பு
குடகில் உணவு தேடி வந்த குட்டியானை ஒன்று குட்டையில் விழுந்தது. இதையடுத்து 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் அதை பத்திரமாக மீட்டனர்.
குடகு-
குடகில் உணவு தேடி வந்த குட்டியானை ஒன்று குட்டையில் விழுந்தது. இதையடுத்து 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் அதை பத்திரமாக மீட்டனர்.
உணவு தேடி வந்த குட்டியானை
குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா காரடா கிராமத்தில் ஏராளமான காபி தோட்டங்கள் உள்ளன. இந்த காபி தோட்டங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. மேலும் இந்த காபி தோட்டத்தின் அருகே குட்டை ஒன்று உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் குடிப்பதற்கும், காபி தோட்டத்திற்கு உணவு தேடியும் அடிக்கடி காட்டுயானைகள் வந்து செல்கின்றன.
அப்போது அந்த யானைகள் காபி தோட்டங்களில் உள்ள செடிகளை மிதித்து நாசப்படுத்திவிட்டு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் உணவு தேடி குட்டியானை ஒன்று வந்தது. அந்த குட்டி யானை காபி தோட்டத்தின் அருகே இருந்த குட்டையில் தண்ணீர் குடிப்பதற்காக வந்தது.
குட்டையில் விழுந்தது
அப்போது அந்த குட்டியானை கால் தவறி குட்டையில் விழுந்தது. இதையடுத்து குட்டியானையால் அந்த குட்டையில் இருந்து வெளியே வர முடியாமல் போனது. இதனால் அந்த குட்டியானை பிளிறி கொண்டே இருந்தது. இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் காபி தோட்ட ஊழியர்கள், குட்டியானையை பார்த்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக குட்டையில் கட்டையை போட்டும், கரையோரங்களில் இருந்த மணலை அப்புறப்படுத்தியும், குட்டியானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது.
பத்திரமாக மீட்பு
இதையடுத்து அந்த குட்டியானை பத்திரமாக மீட்கப்பட்டது. அப்போது மின்னல் வேகத்தில் குட்டையில் இருந்து வெளியே வந்த குட்டியானை சிறிது நேரம் மதம் பிடித்ததுபோன்று காணப்பட்டது. தன்னை மீட்ட வனத்துறையினரை நோக்கி ஓடியது. அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இருப்பினும் அந்த குட்டியானை தும்பிக்கையால் வனத்துறையினரின் வாகனத்தை தாக்கியது. இதை பார்த்த வனத்துறை ஊழியர் மற்றும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அந்த குட்டியானை வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரம் காட்டுயானை காபி தோட்டத்திற்கு வந்து அட்டகாசம் செய்தது மக்கள் மத்தியில் பீதியையும் ஏற்படுத்தியது. இதனால் பதற்றம் அடைந்த மக்கள் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு, யானைகள் நடமாட்டத்தை தடுக்க நிரந்த தீர்வு காணவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.