பாலியல் பலாத்காரம் செய்ததில் மாணவி உயிரிழப்பு; பள்ளி முதல்வர் போக்சோவில் கைது
மாணவி மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பமாக, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் மாணவி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பள்ளியின் முதல்வர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவமொக்கா-
மாணவி மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பமாக, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் மாணவி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பள்ளியின் முதல்வர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
8-ம் வகுப்பு மாணவி
சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா சிவபுரா கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி இவள் சாகர் டவுனில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் சிறுமி உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு விடுதியின் நிர்வாகி தகவல் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கிராமமக்கள் மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பள்ளியின் விடுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சாகர் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி இறப்பை மர்மசாவு என வழக்குப்பதிவு செய்தனர்.
பாலியல் பலாத்காரம்
இதையடுத்து பள்ளி விடுதி நிர்வாகிகள், மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது உயிரிழந்தது தெரியவந்தது.
அதாவது, பள்ளியின் முதல்வரான மஞ்சப்பா (வயது 56) இறந்துபோன மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அவரை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
மூச்சுத்திணறி சாவு
இதனை வெளியே கூற கூடாது என மாணவியை மிரட்டி உள்ளார். இதனால் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.
இ்ந்த நிலையில் சம்பவத்தன்றும் அவர் மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி மூச்சுத்திணறி இறந்ததும் தெரியவந்தது.
இதேப்போல் பல மாணவிகளிடம் பள்ளி முதல்வர் மஞ்சப்பா பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறினர். அவர்கள் போலீசிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவிகள் தெரிவித்தனர்.
போக்சோவில் கைது
இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதும், இதில் மூச்சுத்திணறி அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பள்ளி முதல்வர் மஞ்சாப்பா மீது போக்சோ சட்டம் மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.