அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தோல்வி அடைய வாய்ப்பு
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவில் தற்போது மந்திரிகளாக, எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் 20 பேர் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக கட்சி மேலிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவில் தற்போது மந்திரிகளாக, எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் 20 பேர் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக கட்சி மேலிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
20 பேர் தோல்வி அடைய வாய்ப்பு
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருகிறது. இதையடுத்து, மாநிலத்தில் பா.ஜனதா மேலிடம் சார்பில் தனியார் அமைப்பு மூலமாக கருத்து கணிப்புகளை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த கருத்து கணிப்பில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் பா.ஜனதா மேலிடத்திற்கு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது தற்போது மந்திரிகளாக இருக்கும் சிலர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் என 20 பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இதன்காரணமாக 20 பேருக்கு பதிலாக, புதிய தலைவர்களை தேடும் நிலை பா.ஜனதாவுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 104 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தது.
பிரதமர் மோடி பிரசாரத்தால்...
பின்னர் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு வந்ததால், ஆட்சி அமைக்க முடிந்தது. தற்போது 118 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளில் இருந்து வந்த எம்.எல்.ஏ.க்களால் பழைய மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதலாக 10 தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்று பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டு இருந்தது. தற்போது 20 பேர் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் வந்திருப்பதாலும், மங்களூருவில் பா.ஜனதா இளைஞரணியை சேர்ந்த பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டு இருப்பதாலும் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடி பிரசாரத்தின் மூலமாக தான் 100 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற முடியும் என்றும் கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
புதுமுக வேட்பாளர்கள்
இதையடுத்து, 20 தொகுதிகளுக்கு புதிய முகங்களை வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் 60 தொகுதிகளில் கட்சியை கீழ் மட்டத்தில் இருந்து பலப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜனதா திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.