சிவமொக்காவில் வாராஹி அணையில் தண்ணீர் குறைந்ததால் நீர்மின் நிலையம் மூடல்
சிவமொக்காவில் உள்ள வாராஹி அணையில் தண்ணீர் குறைந்ததால் அங்கிருக்கும் நீர்மின் நிலையம் மூடப்பட்டுள்ளது.
சிவமொக்கா-
சிவமொக்காவில் உள்ள வாராஹி அணையில் தண்ணீர் குறைந்ததால் அங்கிருக்கும் நீர்மின் நிலையம் மூடப்பட்டுள்ளது. லிங்கனமக்கி அணையிலும் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
லிங்கனமக்கி அணை
கர்நாடகத்தில் உள்ள லிங்கனமக்கி அணை மிகவும் முக்கியம் வாய்ந்தது. அங்கு நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதுபோல் சிவமொக்காவில் உள்ள வாராஹி அணையிலும் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. லிங்கனமக்கி அணையில் நீரில் இருந்து மின் உற்பத்தி செய்ய ஷராவதி, மகாத்மா காந்தி, கேருசொப்பா, லிங்கனமக்கி ஆகிய 4 அலகுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதுபோல் வாராஹி அணையில் மாணிநீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் வாராஹி அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததாலும், நாள்தோறும் குறைந்து வருவதாலும் நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களாக மாணி நீர்மின் நிலையம் மூடப்பட்டு இருக்கிறது. இந்த நீர்மின் நிலையத்தில் இருந்து தினமும் 27.50 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வந்தது. தற்போது போதுமான தண்ணீர் இல்லாததால் மின்நிலையத்தில் உள்ள 3 ஜெனரேட்டர்களும் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
சோலார் தகடுகள்...
மேலும் கடல் மட்டத்தில் இருந்து 1,819 அடி கொள்ளளவு கொண்ட லிங்கனமக்கி அணையில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 1,750 அடி அளவில் தண்ணீர் இருந்தது. ஆனால் தற்போது 1,715 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இருப்பினும் லிங்கனமக்கி அணையில் உள்ள தண்ணீரைக் கொண்டு தற்போது மின் உற்பத்தி பணி நடந்து வருகிறது.
இங்குள்ள லிங்கனமக்கி,ஷராவதி, மகாத்மா காந்தி, கேருசொப்பா ஆகிய 4 அலகுகளிலும் சேர்த்து மொத்தம் 10 ஜெனரேட்டர்கள் உள்ளன. அவற்றை கொண்டு தினமும் தலா 103.50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அந்த ஜெனரேட்டர்கள் இரவில் மட்டுமே இயக்கப்படுகிறது. பகல் நேரங்களில் சோலார் தகடுகளை கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
20 சதவீத மின்சார தேவை
லிங்கனமக்கி அணையில் தற்போது இருக்கும் தண்ணீரைக் கொண்டு தொடர்ந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வரும் நாட்களில் மழை பெய்யாமல், அணையில் நீர் குறைந்துவிட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் என்று அணை அதிகாரிகள் தெரிவித்தனர். கர்நாடகத்தில் 20 சதவீத மின்சார தேவையை லிங்கனமக்கி மற்றும் வாராஹி அணையில் உள்ள நீர்மின் நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன.
தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனால் நீர்மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் என்றும், அதன்மூலம் மாநிலத்தில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.