சிவமொக்காவில் நகை வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
சிவமொக்காவில் நகை வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிவமொக்கா-
சிவமொக்காவில் நகை வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நகை வியாபாரி
சிவமொக்கா டவுன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது41). இவர் காந்தி பஜாரில் நகை கடை வைத்து நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கடையில் இருந்து வீட்டிற்கு சாப்பிடுவதற்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் கடைக்கு அவர் செல்லவில்லை. இதையடுத்து கடை ஊழியர்கள் கிருஷ்ணகுமாரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். அப்போது அவரது எண் சுவிட்ச்-ஆப் என வந்தது. இந்தநிலையில் கிருஷ்ண குமார் வீட்டிற்கு ஊழியர்கள் போன் செய்தனர். அதில் அவரது மனைவி பேசினார். அப்போது கிருஷ்ணகுமார் கடைக்கு இன்னும் வரவில்லை என ஊழியர்கள் கூறினர். இதையடுத்து அவரது மனைவி கிருஷ்ணகுமாரின் அறைக்கு சென்றார். ஆனால் அவரது அறை பூட்டு இருந்தது. இதையடுத்து அவர் அறையின் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது கிருஷ்ணகுமார் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார். உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கிருஷ்ணகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விஷம் குடித்த அறையில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில் பிரசாந்த், கணேஷ் ஆகியோர் நகை செய்து கொடுப்பதாக கூறி தன்னிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை வாங்கினர். ஆனால் அவர்கள் 2 பேரும் நகையும் தரவில்லை. கொடுத்த பணத்தையும் கொடுக்கவில்லை. அவர்கள் தன்னை ஏமாற்றி உள்ளனர். இதனால் தற்கொலை செய்து கொள்வதாக அதில் கூறி இருந்தது. கடிதத்தில் இருந்தவர்கள் குறித்து அவரது குடும்பத்தினருடன் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்களுக்கு அதுகுறித்து தெரியவில்லை. கடிதத்தில் எழுதி இருந்த நபர்கள் யார் என்பது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நகை வியாபாரி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.