சந்திர திரிகோண மலைப்பகுதியில் குறிஞ்சி பூக்களை சுற்றுலா பயணிகள் சேதப்படுத்த கூடாது
சந்திர திரிகோண மலைப்பகுதியில் குறிஞ்சி பூக்களை சுற்றுலா பயணிகள் சேதப்படுத்த கூடாது என கலெக்டர் ரமேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூருவில் உள்ள சந்திர திரிகோண மலை மற்றும் முல்லையன்கிரி மலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் தற்போது சந்திர திரிகோண மலையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீல வண்ண குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்குகிறது.
அங்கு சுற்றுலா வருபவர்கள் அந்த மலர்களுடன் புகைப்படம் எடுப்பதுடன் மலர்களை சேதப்படுத்தி செல்கிறார்கள். இதனால் குறிஞ்சி பூக்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து கலெக்டர் ரமேஷ் கூறுகையில், சந்திர திரிகோண மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறிஞ்சி பூக்களுடன் புகைப்படம் எடுக்கிறார்கள்.
புகைப்படம் எடுக்கும் பெயரில் சுற்றுலா பயணிகள் குறிஞ்சி பூக்களை சேதப்படுத்தப்படுத்த கூடாது. மலைக்கு வருபவர்கள் பாலிதீன் பைகளை கொண்டு வரக்கூடாது. குப்பைகளை ஆங்காங்கே போடாமல் குப்பை தொட்டியில் போட வேண்டும். சுற்றுலா தலங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்றார்.