கடந்த 30 ஆண்டுகளில் தொடர்ந்து 2 முறை யாராலும் வெற்றிபெற முடியாத கொள்ளேகால் தொகுதி


கடந்த 30 ஆண்டுகளில் தொடர்ந்து 2 முறை யாராலும் வெற்றிபெற முடியாத கொள்ளேகால் தொகுதி
x
தினத்தந்தி 29 March 2023 2:59 AM IST (Updated: 29 March 2023 12:41 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 30 ஆண்டுகளில் தொடர்ந்து 2 முறை யாராலும் வெற்றிபெற முடியாத கொள்ளேகால் தொகுதி அனைத்து கட்சி வேட்பாளர்களும் திணறி வருகின்றனர்.

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கொள்ளேகால் சட்டசபை தொகுதி. இந்த தொகுதி எலந்தூர், கொள்ளேகால், சாம்ராஜ்நகர் தாலுகாவிற்கு உட்பட்ட சந்தேமரஹள்ளி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். இந்த தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக தேர்தலில் தொடர்ந்து 2 முறை யாரும் வெற்றிபெற்றது இல்லை என்று வரலாறு கூறுகிறது. கடந்த 1989-ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் யாரும் தொடர்ந்து 2 முறை வெற்றிபெற்றது இல்லையாம். கடந்த 1881-ம் ஆண்டிலேயே இந்த தொகுதி தேர்தலை சந்தித்துள்ளது. அதாவது 1881-ம் ஆண்டு மைசூரு மன்னர் ஆட்சியில் இந்த தொகுதியில் இருந்து ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. பின்னர் 1896-ம் ஆண்டு ஆகிலேயர்கள் ஆட்சியின் கீழ் இந்த தொகுதி வந்தது. அப்போதும் இந்த தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்னர் இந்த தொகுதி மெட்ராஸ் மாகாணத்தின் கீழ் சென்றது. பின்னர் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது இந்த தொகுதி மைசூரு மாகாணத்தின் கீழ் சேர்க்கப்பட்டது. அப்போது இது எலந்தூர் தொகுதியாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இங்கு மாகாண உறுப்பினர் பதவிக்காக தேர்தல் நடந்ததாக சொல்லப்படுகிறது. அதையடுத்து சந்தேமரஹள்ளி தொகுதி தனியாகவும், கொள்ளேகால் தொகுதி தனியாகவும் உருவாக்கப்பட்டன. பின்னர் சந்தேமரஹள்ளி கலைக்கப்பட்டு கொள்ளேகால் தொகுதியுடன் அது சேர்க்கப்பட்டது.

இந்த தொகுதி காங்கிரசின் கோட்டையாக கருதப்படுகிறது. 1978-ம் ஆண்டு வரை இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்து 5 முறை வெற்றிவாகை சூடி வந்தனர். பின்னர் காங்கிரசில் இருந்து விலகி பசவய்யா என்பவர், ஜனதா கட்சியில் சேர்ந்து 2 முறை இந்த தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார். 1989-ம் ஆண்டு இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சித்தராமையா போட்டியிட்டு வெற்றி

பெற்றார். அதையடுத்து நஞ்சுண்டசாமி காங்கிரஸ் சார்பில் ஒருமுறையும், பா.ஜனதா சார்பில் ஒருமுறையும் வெற்றிபெற்றார். மேலும் சுயேச்சை வேட்பாளர் பாலராஜ் என்பவர் ஒருமுறை வெற்றிபெற்றார். அவரை அடுத்து மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் துருவநாராயண் ஒருமுறை வெற்றிபெற்றார். அவருக்கு பிறகு பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த என்.மகேஷ் தற்போது இத்தொகுதியில் எம்.எல்.ஏ.வாக உள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டது இல்லை. கொள்ளேகால் தொகுதி இதுவரை 15 தேர்தல்களை சந்தித்துள்ளது. இந்த 15 தேர்தல்களில் ஒரேயொரு முறைதான் பெண் வேட்பாளர் வெற்றிபெற்று இருக்கிறார். அவர் கெம்பம்மா ஆவார். மற்றபடி 9 முறையும், ஜனதா பக்ஷா மற்றும் ஜனதா தளம் கட்சிகள் 3 முறையும் வெற்றிபெற்று உள்ளன. மேலும் சுயேச்சை வேட்பாளர் ஒருமுறையும், பா.ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா ஒருமுறையும் வெற்றிபெற்று இருக்கின்றன.

இந்த தொகுதி கடந்த 66 ஆண்டுகளாக தனித்தொகுதியாக இருந்து வருகிறது. இதுவே ஒரு வரலாறு ஆகும். ஏனெனில் சுதந்திரத்திற்கு பிறகு எவ்வளவோ மாற்றங்கள் செய்யப்பட்டன. முன்பு 2 உறுப்பினர் கொண்ட தொகுதியாக(எலந்தூர்) இருந்து வந்தது. அப்போதும், அதையடுத்து கொள்ளேகால் தொகுதியாக அறிவிக்கப்பட்ட பிறகும் இதுவரையில் இத்தொகுதி தனித்தொகுதியாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இத்தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வான முதல் முறையிலேயே மந்திரியாக பதவி வகித்தவர் என்.மகேஷ் ஆவார். தற்போது இந்த தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கமல் நாகராஜ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இத்தொகுதிக்கான வேட்பாளரை

இன்னும் அறிவிக்கவில்லை.


Next Story