பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர் பெங்களூருவில் கைது
பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலையில் தலைமறைவாக இருந்த தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மங்களூரு-
பிரவீன் நெட்டார் கொலை
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரேவை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார். இவர், பா.ஜனதா இளைஞரணி தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 26-ந் தேதி பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டு இருந்தார். இந்த கொலை சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, பிரவீன் நெட்டார் கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றி அரசு உத்தரவிட்டு இருந்தது.
அதன்பேரில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்திருந்தார்கள். அதே நேரத்தில் இந்த வழக்கில் தட்சிண கன்னடா கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தார்கள். அதே நேரத்தில் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் மேலும் சிலர் தலைமறைவாக இருப்பதும் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
ரூ.5 லட்சம் பரிசு அறிவிப்பு
அவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் குடகு மாவட்டம் மடிகேரி டவுனை சேர்ந்த தவுபில் ஆவார். இவர், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்தவர் ஆவார். இதையடுத்து, தவுபில் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவித்திருந்தனர். அதே நேரத்தில் அவரை கைது செய்யவும் அதிகாரிகள் தீவிரம் காட்டி வந்தனர்.
இந்த நிலையில், தவுபில் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருந்தது. பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தாசரஹள்ளி அருகே மாருதி லே-அவுட்டில் உள்ள 3 மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் தவுபில் பதுங்கி இருப்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் உறுதி செய்தார்கள்.
மாறுவேடத்தில் சென்று கைது
அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மாறு வேடத்தில் அங்கு சென்றிருந்தார்கள். அதாவது பிளம்பர் போன்று வேடமிட்டு அதிகாரிகள் சென்றிருந்தனர். கதவை திறந்த தவுபில் அதிகாரிகளை பார்த்ததும் கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டுக்கதவை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்றனர். அந்த சந்தர்ப்பத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகளை தவுபில் தாக்க முயன்றதுடன், அங்கிருந்து தப்பி ஓடவும் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
ஆனாலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தார்கள். அவர் தங்கி இருந்த வீடு முழுவதையும் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது சில ஆவணங்கள் அதிகாரிகளுக்கு கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் முக்கிய நபராக தவுபில் இருந்ததுடன், அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்திருந்தார் என்று தெரியவந்தது. தற்போது மாறுவேடத்தில் சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தட்சிண கன்னடாவில் விசாரணை
கைதான தவுபில்லை பெங்களூருவில் இருந்து தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. தற்போது தவுபில் சிக்கி இருப்பதன் மூலம் பிரவீன் நெட்டார் கொலையில் தலைமறைவாக இருக்கும் மேலும் சிலர் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.