விராஜ்பேட்டையில் காட்டுயானை தாக்கி படுகாயமடைந்த தொழிலாளி சாவு


விராஜ்பேட்டையில்  காட்டுயானை தாக்கி படுகாயமடைந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விராஜ்பேட்டையில் காட்டுயானை தாக்கி படுகாயமடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

குடகு-

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பாலிபெட்டாவை சேர்ந்தவர் பாபி. கூலி தொழிலாளி. இவர் கடந்த செவ்வாய்க் கிழமை காலை மஸ்கல் பகுதியில் உள்ள காபி தோட்டத்திற்கு வேலைக்கு சென்றிருந்தார். அங்கு வேலை பார்த்து கொண்டிருந்தபோது, திடீரென்று வனப்பகுதியில் இருந்து காட்டுயானை ஒன்று தோட்டத்திற்குள் புகுந்தது. இந்த காட்டுயானை அங்கிருந்த கூலி தொழிலாளிகள் அனைவரையும் விரட்டியது. இதில் பாபியுடன் இருந்த சக கூலி தொழிலாளிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். ஆனால் பாபியால் ஓட முடியவில்லை. காட்டுயானையிடம் சிக்கி கொண்டார். இந்தநிலையில் பாபியை மடக்கிய யானை தும்பிக்கையால் தூக்கி வீசியதுடன், காலால் மிதித்து தாக்கியது. இந்த தாக்குதலில் பாபி பலத்த காயம் அடைந்தார். சக கூலி தொழிலாளிகள் பாபியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மைசூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பாபிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்ததும் பாலிபெட்டா கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் விராஜ்பேட்டை வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுப்பதுடன், இறந்த கூலி தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று கூறினர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story